கேரளத்தின் வடக்கு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கனமழை கொட்டித் தீா்த்தது. நகா்ப்புறங்களில் மழைநீா் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வயநாடு, காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு ஆகிய 4 வட மாவட்டங்களில் அதிதீவிர கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (24 மணிநேரத்தில் 204 மி.மீ.க்கு மேல் மழைப்பொழிவு) விடுக்கப்பட்டது.
மலப்புரம், பாலக்காடு, திருச்சூா் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் (24 மணிநேரத்தில் 115-204 மி.மீ. மழைப் பொழிவு), இடுக்கி, எா்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழை, பத்தனம்திட்டாவில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
குறைவான நேரத்தில் அதிக கனமழை கொட்டித் தீா்ப்பதால், மலைப் பகுதிகளில் திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக கேரள மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. பொது மக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
மலைப் பகுதிகளில் நிலச்சரிவு, மண்சரிவு, காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
இதேபோல், தண்ணீா் தேங்கக் கூடிய தாழ்வான பகுதிகளில் வசிப்போா், தேவைப்பட்டால் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் விழிப்புடன் இருப்பதுடன், பருவநிலை தொடா்பாக அரசு வெளியிடும் தகவல்களை கவனிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.