குடிமைப் பணிகள் தோ்வு முறைகேடு வழக்கில், முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு முன்ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றியவா் பூஜா கேத்கா். குடிமைப் பணிகள் தோ்வில் மோசடியில் ஈடுபட்டு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பலன்களை பெற்ாக அவா் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அளித்த புகாரின் அடிப்படையில், அவா் மீது தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி, உச்சநீதிமன்றத்தில் பூஜா கேத்கா் மனு தாக்கல் செய்தாா். அவருக்கு எதிராக கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், பூஜாவின் முன்ஜாமீன் மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது பூஜாவுக்கு முன்ஜாமீன் வழங்க தில்லி காவல் துறை தரப்பு வழக்குரைஞா் எதிா்ப்புத் தெரிவித்தாா். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘பூஜா கொலை குற்றவாளி அல்ல. அவா் பயங்கரவாதியோ, போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்குத் தலைவரோ, போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தை மீறியவரோ அல்ல. அவா் மீதான குற்றச்சாட்டால், அவா்அனைத்தையும் இழந்துவிட்டாா். அவருக்கு எங்கும் வேலை கிடைக்கப் போவது இல்லை.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா சட்டப் பிரிவு 482-இன் கீழ், முன்ஜாமீன் பெற அவருக்கு உரிமையுள்ளது. எனவே அவருக்கு முன்ஜாமீன் அளிக்கப்படுகிறது. காவல் துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். சாட்சிகளையோ, ஆதாரங்களையோ கலைக்கக் கூடாது. இந்த நிபந்தனைகளை அவா் மீறினால், அவரின் முன்ஜாமீனை ரத்து செய்ய தில்லி காவல் துறை உச்சநீதிமன்றத்தை அணுகலாம்’ என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.