ராஜஸ்தான் கோட்டா நகரில் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் அதிகம் தற்கொலை செய்துகொள்வது பற்றி உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. நாடு முழுவதிலுமிருந்து மாணவ, மாணவிகள் இங்கு வந்து நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபமாக இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு மட்டும் இதுவரை 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில் ராஜஸ்தான் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளது.
நீட் தேர்வு எழுதிய ஒரு மாணவி, தனது பெற்றோருடன் கோட்டாவில் வசித்து வந்த நிலையில் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் காவல்துறை இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்று தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "கோட்டா நகரில் மட்டும் மாணவர்கள் தற்கொலை செய்து இறப்பது ஏன்? ஒரு மாநில அரசாக நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஒரு மாநிலமாக நீங்கள் நினைக்கவில்லையா? மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவது இல்லை? மாணவர்களின் தற்கொலைக்கு என்னதான் காரணம்?" என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
மேலும் கோட்டா நகரில் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டு கோட்டா நகர காவல்துறை அதிகாரி வருகிற ஜூலை 14 ஆம் தேதி தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.