பாகிஸ்தானை பயங்கரவாதத்தில் இருந்து மீட்க அந்நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 26) கேட்டுக்கொண்டார்.
பயங்கரவாதத்தை ஒழித்து மனிதநேயத்தைக் காப்பதற்கான போராட்டமே ஆபரேஷன் சிந்தூர் எனக் குறிப்பிட்ட மோடி, பயங்கரவாதத்தை சுற்றுலாவாக பாகிஸ்தான் கருதுவதாகவும், இது மிகவும் ஆபத்தானது எனவும் விமர்சித்தார்.
தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இரண்டு நாள்கள் பயணமாகச் சென்றுள்ள மோடி, பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து வதோதராவில் வாகனப் பேரணி மேற்கொண்டார்.
இந்தப் பேரணியில் சாலையின் இருபுறமும் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் வரிசையாக நின்று பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, பூஜ் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்தும் இந்தியாவின் பதிலடி தாக்குதல் மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்தும் பேசினார்.
பிரதமர் மோடி பேசியதாவது,
''இந்தியாவை வெறுப்பதும் அதற்கு தீங்கு விளைவிக்கும் வழிகள் குறித்து சிந்திப்பது மட்டுமே பாகிஸ்தானின் ஒரே நோக்கமாக உள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக பயங்கரவாதத்துக்கு எதிரானதே இந்தியாவின் நிலைப்பாடு. ஆபரேஷன் சிந்தூர் இதனை தெள்ளத்தெளிவாக உலக நாடுகளுக்கு பறைசாற்றியது.
இந்தியாவை யார் அச்சுறுத்த நினைத்தாலும் அதற்கான பதிலடி, அவர்கள் வழியிலேயே கொடுக்கப்படும். ஆபரேஷன் சிந்தூர் என்பது பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழித்து மனிதநேயத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டமாகும்.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என 15 நாள்கள் காத்திருந்தோம்; ஆனால், பாகிஸ்தான் அவ்வாறு எதையும் செய்யவில்லை.
அதனால், நமது முப்படைகளுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து பயங்கரவாதிகளுக்கு அவர்கள் வழியிலேயே தகுந்த பதிலடி கொடுத்தோம். ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய, 22 நிமிடங்களில் இந்தியாவில் பலம் என்ன என்பது அவர்களுக்கு நிரூபிக்கப்பட்டது.
பாகிஸ்தானை பயங்கரவாதத்தில் இருந்து மீட்க அந்நாட்டு மக்கள் முன்வர வேண்டும். பாகிஸ்தான் குடிமக்கள் உண்ணும் உணவு அமைதியான சூழலுக்கு மத்தியில் இருக்க வேண்டுமே தவிர தோட்டாக்களுக்கு மத்தியில் அல்ல.
முன்பு பிரதமராகப் பதவியேற்கும்போது நாட்டின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நமது ஆயுதப் படைகள் வலுவாக இருக்கும்போது மட்டுமே உண்மையில் வளர்ந்த இந்தியா சாத்தியமாகும், அதேபோல் நமது பொருளாதாரமும் அப்போதுதான் வளரும். தொடர்ந்து முன்னேறுவது மட்டுமே நமது குறிக்கோள். வறுமையை ஒழித்து வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவோம்'' எனப் பிரதமர் பேசினார்.
இதையும் படிக்க | அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவரானார் கெளரவ் கோகோய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.