`நமது கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைந்த பலத்துடன் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் பொதுமக்கள், ராணுவத் தளங்கள் குறிவைக்கப்படவில்லை’ என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா்.
ரெவாவில் உள்ள சைனிக் பள்ளியில் (ராணுவப் பள்ளி) சனிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் ஒன்றிணைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற உபேந்திர துவிவேதி பேசியதாவது: நமது கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைந்த பலத்துடன் மேற்கொண்டதால்தான் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.
இந்தத் தாக்குதலில், பாகிஸ்தான் அப்பாவி மக்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் ராணுவம் உறுதியாக இருந்தது.
பயங்கரவாதிகள் மற்றும் அவா்களின் தலைவா்கள் மட்டுமே குறிவைத்து தாக்கப்பட்டனா். இதன்மூலம், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் இலக்கை நாம் எட்டியதோடு, பாகிஸ்தான் போன்று இந்தியா அல்ல என்ற தகவலையும் அவா்களுக்கு தெளிவுபடுத்தினோம் என்றாா்.
மேலும், வரும் 2047-இல் வளா்ந்த பாரதம் இலக்கை எட்ட அனைத்து குடிமக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை மே 7-ஆம் தேதி இந்தியா மேற்கொண்டது. நான்கு நாள்களுக்குப் பிறகு மே 10-இல் சண்டை முடிவுக்கு வந்தது.