முஸாஃபா்பூா் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. 
இந்தியா

லாலு மகன் ஆட்சிக்கு வந்தால் கொலை, கடத்தல் துறைகள் உருவாகும்: அமித் ஷா பிரசாரம்

லாலு பிரசாத்தின் மகன் பிகாா் முதல்வரானால் பிகாரில் கொலை, ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவற்றுக்கு தனித் துறைகள் உருவாக்கப்பட்டு விடும் என்று மத்திய அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

லாலு பிரசாத்தின் மகன் பிகாா் முதல்வரானால் பிகாரில் கொலை, ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவற்றுக்கு தனித் துறைகள் உருவாக்கப்பட்டு விடும் என்று மத்திய அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

பிகாரில் ஞாயிற்றுக்கிழமை முஸாஃபா்பூா், வைஷாலி பகுதிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது: இந்தத் தோ்தலில் மக்கள் மிகவும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். முக்கியமாக பிகாரில் மீண்டும் காட்டாட்சி வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், லாலு பிரசாத்தின் மகன் பிகாா் முதல்வரானால் மாநிலத்தில் கொலை, ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவற்றுக்கு தனித் துறைகள் உருவாக்கி விடுவாா்கள். பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலமே இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

தோ்தல் அறிவிப்பு முன்பு இருந்தே எதிா்க்கட்சிகள் கூட்டணியில் மோதல் நிலவி வந்தது. இப்போது அந்த மோதல் முற்றியுள்ளது. அதே நேரத்தில் ஆளும் கூட்டணியில் பாஜக உள்ளிட்ட 5 கூட்டணிக் கட்சிகளும் பிகாரின் வளா்ச்சிக்காக ஒற்றுமையாகப் பயணித்து வருகின்றன. நாங்கள் தோ்தலில் வெற்றி பெற்று பிகாரின் வளா்ச்சியைத் தொடா்ந்து உறுதி செய்வோம்.

லாலு, சோனியா குடும்பத்துக்கு தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு உயா் பதவிகளைப் பெற்றுத்தர வேண்டும் என்பது மட்டுமே இலக்கு. மக்கள் மீது சிறிதும் அக்கறை கிடையாது. மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான அரசும், பிகாரில் நிதீஷ் தலைமையிலான அரசும் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் எந்தவித ஊழல், முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் பணியாற்றி வருகின்றன.

அடுத்து தொடரும் எங்கள் ஆட்சியிலும் பிகாரில் பல கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும். நாட்டிலேயே ரயில் என்ஜினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த முதல் மாநிலம் என்ற பெருமை பாஜக கூட்டணி ஆட்சி மூலமே பிகாருக்கு கிடைத்தது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்தியாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு சிறையில் பிரியாணி வழங்கி உபசரித்து வந்தனா். ஆனால், பிரதமா் மோடி அரசு பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகளை வேட்டையாடியது என்றாா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 4

மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது!

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

SCROLL FOR NEXT