பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சித் தொண்டர் துலர்சந்த் யாதவ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சர்ச்சைக்குரிய முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஐக்கிய ஜனதா தளத்தின் மொகாமா தொகுதியின் வேட்பாளருமான அனந்த் சிங்கை பாட்னா காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
பிகாரில் 243 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவும், நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாள்களே இருப்பதால், தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன.
முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸின் மகா கூட்டணி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி தனியாகவும் களம் காண்பதால் பிகார் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
பிகார் தேர்தலில் காங்கிரஸின் மகாபந்தன் கூட்டணித் தரப்பில் நிலவிய இழுபறி முடிவுக்கு வந்த நிலையில், முதல்வர் வேட்பாளராக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மொகாமா தொகுதியில் போட்டியிடும் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷி பியூஷுக்காக அவரது மாமாவும், ஜன்சுராஜ் தொண்டருமான துலார்சந்த் யாதவ், ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஐக்கிய ஜனதா தளத்தின் மொகாமா தொகுதியின் வேட்பாளருமான அனந்த் சிங்கை பாட்னா காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை இரவு கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா எஸ்எஸ்பி தலைமையிலான காவல் துறையினர், பார்ஹில் உள்ள ஆனந்த் சிங்கின் வீட்டிற்குச் சென்று அவரைக் கைது செய்தனர். அவர், விசாரணைக்காக பாட்னாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பிகாரில் பிரபல தாதாவான அனந்த் சிங், ராஷ்ரிடிய ஜனதா தளத்தில் இருந்துள்ளார். அதன்பின்னர், ஐக்கிய தனதா தளத்தில் இணைந்து எம்.எல்.ஏ.வானார். அனந்த் சிங்கின் மனைவி நீலம் தேவி தற்போது மொகாமா எம்.எல்.ஏவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.