புது தில்லி: நாட்டில் உள்ள 14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.
நாட்டில் உள்ள சிறார்கள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், சீனா மற்றும் ஆஸ்திரேலியாவில் 14 வயது முதல் 18 வயதுடைய சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பது போல, இந்தியாவிலும் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. நேபாளத்தில் சமூக வலைத்தளப் பயன்பாட்டை நிறுத்தியதால் என்ன விளைவு ஏற்பட்டது என்பதை பார்த்தீர்களா? என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.
நாடு முழுவதும், சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி, சிறார்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், வாழ்க்கை சீரழிந்து வருகிறது. பல இடங்களில் ரீல்ஸ் மோகத்தால் உயிரை இழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடியில், ரயில் மீது ஏறி ரீல்ஸ் எடுக்க முயன்ற இளைஞர், மின்சாரம் தாக்கி பலியானதும் குறிப்பிடத்தக்கது.
அதுபோல, அண்மையில் நேபாளத்தில், சமூக வலைத்தளப் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் ஜென் இசட் இளைஞர்கள், கொதித்தெழிந்து மிகப்பெரிய வன்முறையை அரங்கேற்றியிருந்தனர். இது அந்நாட்டில் ஆளும் அரசு கவழிக் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.