மத்திய அரசுக்கு எதிரான வழக்கை எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதில் அரசுக்கு விரும்பமில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இருக்கும் வழக்கை ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றக்கோரி நள்ளிரவில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களுக்கு ஒரே மாதிரியான நியமன விதிகள் கொண்டுவரப்பாட்ட தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை மேற்கொண்டு வந்தது.
அனைத்து மனுதாரர்களின் இறுதி வாதங்களையும் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கேட்டுள்ள நிலையில், சர்வதேச நடுவர் மன்றத்தில் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி பங்கேற்க சென்றதால், அவரின் வேண்டுகோளின் பேரில் விசாரணை சில நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அடுத்த கட்ட விசாரணை ஓரிரு நாளில் நடைபெறவிருந்த நிலையில், தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கை ஐந்து நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு மாற்றக் கோரி திங்கள்கிழமை அதிகாலை மத்திய அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது,
”மத்திய அரசு இதுபோன்ற ஒரு உத்தியைக் கையாண்டு நீதிமன்றத்துடன் விளையாடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மனுதாரர்கள் தங்கள் வாதங்களை முடித்த பிறகு, அரசாங்கம் இப்போது ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றைக் கோருவது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம், நான் விரைவில் ஓய்வு பெறவிருப்பதால்தான் எனது தலைமையிலான இந்த அமர்வை மத்திய அரசு தவிர்க்கிறது என்பதையும் கவனத்தில் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, “நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துவது அரசின் நோக்கமல்ல, தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். பெரிய அமர்வு விசாரணைக்கு அரசு விரும்புகிறது” என்று அட்டர்னி ஜெனரல் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி கவாய், "மத்திய அரசு நள்ளிரவில் மனுவை தாக்கல் செய்தது நீதிமன்ற நடைமுறையை மீறுவதாகும். இந்த விஷயத்தை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு பரிந்துரைப்பது அவசியம் என்று நாங்கள் நினைத்தால், நாங்களே அவ்வாறு செய்வோம்" என்றார்.
தொடர்ந்து, தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிரான அடுத்தக்கட்ட விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.
தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிக்காலம் வருகின்ற நவ. 23 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.