சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் பின்புறத்தில் பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் உயரிழந்தனர்; 14 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியர் சஞ்சய் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோர்பா மாவட்டத்தில் உள்ள கெவ்ரா ரயில் நிலையத்தில் இருந்து பிலாஸ்பூர் ரயில் நிலையம் நோக்கி மெமு பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது கதோரா-பிலாஸ்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அதே தடத்தில் முன்னால் சென்ற சரக்கு ரயிலின் பின்புறத்தில் பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் பெட்டி ஒன்று சரக்கு ரயில் பெட்டியின் மேல்பகுதிக்குச் சென்றதுடன் இரு ரயில்களின் பல்வேறு பெட்டிகள் தடம்புரண்டன.
விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 14 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இரு ரயில்களுக்கு இடையே இடிபாடுகளில் சிக்கிய 2 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
சம்பவ இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணியை ரயில்வே அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டு வருகிறது. உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரூ.10 லட்சம் நிவாரணம்: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்குவதாக ரயில்வே அறிவித்தது.
முதல்வர் இரங்கல்: சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டுவர வேண்டுகிறேன். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். சம்பவ இடத்தில் ரயில்வே மற்றும் பிலாஸ்பூர் மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணியை வேகப்படுத்தியுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.