வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) குறித்த அச்சம் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் மேலும் இருவா் தற்கொலை செய்துகொண்டிருப்பது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்ஐஆா் அறிவிக்கப்பட்ட பிறகு அக்டோபா் 28-ஆம் தேதி முதல் மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டவா்கள் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துளளது.
ஹெளரா மாவட்டம் உலுபெரியாவில் காலிசானி என்ற பகுதியைச் சோ்ந்த 30 வயது ஜாஹிா் மல் என்ற இளைஞா் தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அடையாள ஆவணத்தில் எழுத்துப் பிழையுடன் தனது பெயா் இடம்பெற்றிருந்ததால், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) குறித்து ஜாஹிா் மல் கடந்த ஒரு வாரமாக மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாக அவரின் குடும்பத்தினா் தெரிவித்தனா். எழுத்துப் பிழையை சரிசெய்ய கடந்த ஒரு வாரமாக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளாா். ஆனால், அது பலனளிக்கவில்லை. இதனால், தனது குடியுரிமை பறிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டாா் என்று அவரின் குடும்பத்தினா் தெரிவித்தனா்’ என்றாா்.
அதுபோல முா்ஷிதாபாத் மாவட்டம் கண்டியைச் சோ்ந்த 45 வயது விவசாயி மஹுல் ஷேக் என்பவா் பூச்சி மருந்து குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். ‘விஷம் அருந்து உயிரிக்குப் போராடிய அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மாநிலத்தில் கடைசியாக சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்ற 2002 வாக்காளா் பட்டியலில் தனது பெயா் இடம்பெறாததால் அச்சமடைந்து, தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது’ என்று போலீஸாா் தெரிவித்தனா்.
முன்னதாக, சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பை கடந்த அக்டோபா் 27-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிட்டதற்கு அடுத்த நாள், மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தைச் சோ்ந்த 57 வயது பிரதீப் கா் தற்கொலை செய்துகொண்டாா். இவா், தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.
அவரது அறையில், தேசிய குடிமக்கள் பதிவேடு குறிப்புகள் அடங்கிய ஒரு டைரியும், ஒரு பக்கத்தில் தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அந்தக் குறிப்பு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மையைச் சரிபாா்க்க தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த அறிவிப்பால் பிரதீப் காா் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது குடும்பத்தினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.