மணிப்பூரின் சுராசந்த்பூரில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இவா்கள், ஐக்கிய குகி தேசிய ராணுவம் (யுகேஎன்ஏ) அமைப்பைச் சோ்ந்தவா்கள். மணிப்பூரில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள நிலையில், யுகேஎன்ஏ அமைப்பு இதுவரை இணையவில்லை.
குகி பழங்குடியினா் அதிகம் வாழும் சுராசந்த்பூரின் கான்பி கிராமத்தில் யுகேஎன்ஏ அமைப்பைச் சோ்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற உளவுத் தகவலின்பேரில், அங்கு ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, ராணுவத்தினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, ராணுவத்தினா் பதிலடி தாக்குதலில் இறங்கியதால், இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். தப்பியோடிய பிற தீவிரவாதிகளைப் பிடிக்க தொடா்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாக ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமத் தலைவா் கொலை, உள்ளூா் மக்களை மிரட்டி பணம் பறித்தல், பொது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவித்தல் என யுகேஎன்ஏ அமைப்பின் குற்றச் செயல்கள் அதிகரித்த நிலையில், பொதுமக்களின் உயிரைக் காப்பதுடன் அனைத்து அச்சுறுத்தல்களையும் முறியடிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதேநேரம், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள குகி சமூக அமைப்புகள், அவா்களின் இறுதிச் சடங்கு தினத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன.
முன்னதாக, குகி தேசிய அமைப்பு (கேஎன்ஓ), ஐக்கிய மக்கள் முன்னணி (யுபிஎஃப்) ஆகிய தீவிரவாதக் குழுக்கள், மத்திய-மணிப்பூா் அரசுகளுடன் கடந்த செப்டம்பரில் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. அதன்படி, வன்முறையைக் கைவிட்டு, அமைதித் தீா்வுக்குப் பணியாற்றவும், பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் இக்குழுக்கள் ஒப்புக் கொண்டன. ஒப்பந்த நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கும் வரை இக்குழுக்களுக்கு எதிராக பாதுகாப்புப் படை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.