மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  
இந்தியா

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ‘எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா தேர்தலில் நடைபெற்ற வாக்குத் திருட்டு தொடர்பான ஆதாரங்களை ராகுல் வெளியிட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஹரியாணா சட்டப்பேரவையில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் மூலம் வாக்குத் திருட்டு நடைபெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆளுங்கட்சியுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆகஸ்ட் மாதம், சில ஆதாரங்களை வெளியிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, ‘தி ஆலந்து பைல்ஸ்’ என்ற தலைப்பில் கர்நாடக மாநிலம் ஆலந்த் சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் 6,000-க்கும் அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக செப்டம்பர் மாதம் குற்றச்சாட்டை வைத்தார்.

பிகாரில் முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து வாக்குத் திருட்டு தொடர்பான ’எச் பைல்ஸ்’ வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ’எச் பைல்ஸ்’ என்ற தலைப்பில் சான்றுகளை வெளியிட்டு, புதன்கிழமை நண்பகல் 12.15 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பேசியதாவது:

”நான் 100 சதவீதம் உண்மையை மட்டுமே கூற விரும்புகிறேன். ’எச் பைல்ஸ்’ என்பது ஒரு மாநிலமே எப்படி திருடப்பட்டது என்பது பற்றியது. வாக்குத் திருட்டு என்பது ஒரு தொகுதியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாநிலத்திலும் நடக்கிறது. ஹரியாணாவில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவில் ஹரியாணா துடைத்தெறியப்பட்டது.

எங்களின் ஆய்வில் பெறப்பட்ட தரவுகளை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். எனது குழுவிடம் பல கோணங்களில் பலமுறை மறுஆய்வு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸின் வரலாற்று வெற்றியை தோல்வியாக மாற்றுவதே ‘ஆபரேஷன் ஆட்சித் திருட்டு’. வெறும் 22,779 வாக்குகள் வித்தியாசத்தின் காங்கிரஸ் தோல்வியடைந்தது. ஒரு தொகுதியில் 32 வாக்குகள், 7 தொகுதிகளில் 5,000 வாக்குகள் குறைவாகவே தோல்வி அடைந்துள்ளது காங்கிரஸ்.

ராய் தொகுதியில் உள்ள 10 வாக்குச் சாவடிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் ஒரே பெண்ணின் புகைப்படம், 22 பெயர்களில் இடம்பெற்றுள்ளன. கபி சீமா, கபி ஸ்வீட்டி, கபி சரஸ்வதி போன்ற பெயர்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால், உண்மையில் அந்த பெண் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மேத்யூஸ் பெரேரா. ஹரியாணாவில் இதுபோன்று 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளது.

போலியாக 5,21,619 வாக்காளர்கள், போலி முகவரி கொண்ட 93,174 வாக்காளர்கள், ஒரே வீட்டில் 100-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் என மொத்தம் 19,26,351 வாக்காளர்கள் ஹரியாணாவில் இடம்பெற்றிருந்தனர். மேலும், பலர் படிவம் 6 மற்றும் 7 போன்றவை மூலம் போலியாக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

2 கோடி வாக்காளர்களை கொண்ட ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் ஒரு பெண்ணின் புகைப்படத்தில் 100 பெயர்கள் உள்ளன. மற்றொரு பெண்ணின் புகைப்படம், இரண்டு வாக்குச் சாவடிகளில் 223 பெயர்களில் இடம்பெற்றுள்ளன.

இதன்காரணமாகதான் தேர்தல் ஆணையம் சிசிடிவி காட்சிகளை அழிக்க முயற்சிக்கிறது.

பிளர் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் புகைப்படம், பல வாக்குச் சாவடிகளில் துர்கா, சங்கீதா போன்ற பெயர்களில் இடம்பெற்றுள்ளார். இதேபோன்று, 1,24,177 வாக்காளர்கள் பல வாக்குச் சாவடிகளில் ஹரியாணாவில் உள்ளனர்.

உத்தரப் பிரதேச பாஜக அமைச்சர் லட்சுமி நாராயணுடன் இருக்கும் பாஜக நிர்வாகி தால்சந்த் மற்றும் அவரது மகனின் பெயரும் புகைப்படமும் உத்தரப் பிரதேச வாக்காளர் பட்டியலிலும் இருக்கிறது, ஹரியாணா வாக்காளர் பட்டியலிலும் உள்ளது. இதுபோன்று உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் ஹரியாணா பட்டியலிலும் உள்ளனர்.

மேலும், ஹரியாணா தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் ஆதரவாளர்களின் 3.5 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தையே திருடி இந்திய அரசியலமைப்பை அழித்துள்ளனர். தற்போது சிறப்பு தீவிர திருத்தம் என்ற புதிய ஆயுதத்தை எடுத்துள்ளனர்.

பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் சட்டப்பூர்வமாக வெற்றிபெற்று பதவியேற்கவில்லை என்றும், ஹரியானா முதல்வர் சட்டப்பூர்வமாக வெற்றி பெறவில்லை என்றும், திருட்டப்பட்டு அரசை அமைத்துள்ளனர் என்றும் இந்திய மக்களுக்கு நாங்கள் தெரிவித்து கொள்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

25 lakh fake voters in Haryana! Rahul releases 'H files'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கப்பூரில் 20 ஆயிரம் அடிகள்... அங்கிதா சர்மா!

கலைகளிலே அவள் ஓவியம்... சஞ்சனா திவாரி!

ஹேப்பி பர்த் டே... குஷி கபூர்!

15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! எண்ணிக்கை 285 ஆக அதிகரிப்பு!

அரசன் தரமாக இருக்கும்: கவின்

SCROLL FOR NEXT