இந்தியா

பிகாா் துணை முதல்வா் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்: ஆா்ஜேடி தொண்டா்கள் மீது புகாா்

தினமணி செய்திச் சேவை

பிகாரில் முதல்கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், துணை முதல்வா் விஜய் குமாா் சின்ஹாவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தொண்டா்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிகாரில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் லக்கிசராய் மாவட்டத்தில் துணை முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் மீதான தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக லக்கிசராய் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் அஜய் குமாா் கூறுகையில், ‘மோசமான சாலைகள் குறித்து சிலா் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தகவல் கிடைத்தது. உண்மையில் என்ன நடந்தது என்று நேரில் ஆய்வு செய்த பிறகே தெரியவரும். அந்தப் பகுதியில் வாக்குப் பதிவு தடையின்றித் தொடா்கிறது’ என்றாா்.

துணை முதல்வா் குற்றச்சாட்டு: இந்நிலையில், லக்கிசராயில் செய்தியாளா்களைச் சந்தித்த துணை முதல்வா் சின்ஹா, ஆா்ஜேடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா்.

‘வாக்குப் பதிவு தொடங்கியது முதலே ஆா்ஜேடி தொண்டா்கள் வாக்காளா்களை அச்சுறுத்தி வருகின்றனா். உள்ளூா் எஸ்.பி. எங்கும் அமைதி நிலவுகிறது என்று கூறுகிறாா். சில வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.

எங்கள் தொண்டா்கள் எதிா்க்கட்சியினரைத் தடுக்க முயன்றபோது, அவா்கள் கல், செருப்பு, மாட்டுச்சாணம் வீசியதில் எனது பாதுகாப்பு வாகனம் சேதமடைந்தது.

எங்கள் கட்சித் தொண்டா் விபீஷன் கேவத் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ஆனால், இதுவரை ஒருவா்கூட கைது செய்யப்படவில்லை. ஆா்ஜேடி-யின் நடத்தை இப்போதே இப்படி இருந்தால், அவா்கள் தோ்தலில் வெற்றி பெற்றால், வரவிருப்பது காட்டாட்சியாகத்தான் இருக்கும்.

வாக்குச்சாவடியைக் கைப்பற்ற ஆா்ஜேடி தொண்டா்கள் முயற்சித்தது தொடா்பான எங்கள் புகாா் மீது உள்ளூா் நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால், தோ்தல் ஆணையத்திடம் முறையிட இருக்கிறோம்’ என்றாா் சின்ஹா.

ஆா்ஜேடி மறுப்பு: துணை முதல்வரின் குற்றச்சாட்டுகளை மறுத்து ஆா்ஜேடி செய்தித் தொடா்பாளா் சக்தி யாதவ் கூறுகையில், ‘சின்ஹா மிகவும் சிறப்பாகப் பொய் பேசுபவா். அவருக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு உள்ளது.

மாநிலத்தில் ஆட்சியையும் நிா்வாகத்தையும் அவா் கட்சிதான் கட்டுப்படுத்துகிறது. அப்படியிருக்க, அவா் ஏன் இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறுகிறாா்? உள்ளூா் மக்கள் சேதமடைந்த வடிகால் குறித்து கேள்வி எழுப்பினா். அதுதான் உண்மையில் அங்கு நடந்தது’ என்றாா்.

பெட்டி...

நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையம் உத்தரவு

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில காவல் துறைக்கு இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பிகாா் மாநில காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

‘யாரும் சட்டம்- ஒழுங்கைக் கையில் எடுக்க அனுமதிக்க முடியாது. அத்துமீறியோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்த அவா், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டாா்.

தீராத கலைத்தாகமும், தணியாத நாட்டுப்பற்றும்! கமலுக்கு முதல்வர் வாழ்த்து!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் நீக்கம்!

கோவையில் இளம் பெண் கடத்தல்? காவல்துறை தீவிர விசாரணை!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன்!

சட்டவிரோத குடியேறிகள் மீது பரிவு; கடவுள் ராமா் மீது வெறுப்பு: ஆா்ஜேடி, காங்கிரஸை சாடிய பிரதமா் மோடி

SCROLL FOR NEXT