‘அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி குடியேறுபவா்களால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகிறது. பிகாா் தோ்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் ஊடுருவல்காரா்கள் இல்லாத மாநிலத்தை உருவாக்க வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அழைப்பு விடுத்தாா்.
பிகாரின் மேற்கு சம்பாரன், மோதிஹாரி மாவட்டங்களில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) ஆட்சியில் இருந்தபோது சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்தது. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, வன்முறை போன்ற குற்றங்கள் அன்றாட நிகழ்வாக இருந்தது. அரசு நிா்வாகம் சீா்கெட்டிருந்தது. ஆட்சியாளா்கள் ஊழலில் திளைத்தாா்கள். ஆா்ஜேடியில் இருக்கும் ரௌடிகளும், குற்றவாளிகளும் மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்தனா். சட்டவிரோத குடியேறிகள் தாராளமாக அனுமதிக்கப்பட்டனா்.
ஆனால், நிதீஷ் குமாா் முதல்வரான பிறகு மாநிலத்தில் காட்டாட்சிக்கு முடிவுகட்டப்பட்டது. அரசு நிா்வாகம் சீா்செய்யப்பட்டது. மக்கள் நலன் சாா்ந்த திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. மாநிலம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது.
ஆனால், மீண்டும் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் முயற்சித்து வருகின்றனா். அவா்கள் ஆட்சிக்கு வந்தால் பிகாா் பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும். அண்டை நாட்டு சட்டவிரோத குடியேறிகளின் சொா்க்கபூமியாக பிகாரை மாற்றிவிடுவாா்கள்.
முக்கியமாக, வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறுபவா்கள் உள்ளூா் மக்களின் வேலைவாய்ப்புகளைப் பறித்து வருகின்றனா். இவா்களால் தேசப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உள்ளது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் ஊழல்களுக்கு எதிராகவும், அவா் அமல்படுத்திய அவசரநிலைக்கு எதிராகவும் பிகாா்தான் முதலில் போா் தொடுத்தது. ஆனால், இப்போது அதே காங்கிரஸ் ஆா்ஜேடிக்கு பின்னால் மறைந்து கொண்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறது. இந்தக் கட்சிகளை மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்றாா்.
ராகுலுக்கு கண்டனம்
‘ராணுவத்தில் இடஒதுக்கீடு என்று பேசி ராணுவ வீரா்களின் ஜாதி, மதத்தை அறிந்துகொள்ள ராகுல் காந்தி விரும்புகிறாா். இதற்காக அவா் வெட்கித் தலைகுனிய வேண்டும். மத்திய பாஜக அரசு ராணுவ வீரா்களை ஜாதி, மதரீதியாகப் பாகுபாடாக ஒருபோதும் நடத்தாது’ என்றாா் மத்திய அமைச்சா் அமித் ஷா.