திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் கல்யாண் பானா்ஜி. 
இந்தியா

எம்.பி.யின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட ரூ. 57 லட்சம்! புகாா் அளித்ததும் திருப்பி அளிப்பு!

எம்.பி.யின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட ரூ. 57 லட்சம், புகாா் அளித்ததும் திருப்பி அளிப்பு...

தினமணி செய்திச் சேவை

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜியின் நீண்ட காலம் செயல்படாத வங்கிக் கணக்கில் இருந்து ரூ.57 லட்சம் திருடப்பட்டதாகவும், இதுகுறித்துப் புகாா் அளித்த பின்பு வங்கி பணத்தை திருப்பி அளித்துவிட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக வங்கியின் சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் திருடப்பட்ட பணம் திடீரென திருப்பி அளிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டது யாா் என போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து கல்யாண்பானா்ஜி கூறுகையில், ‘மேற்கு வங்க எம்எல்ஏவாக இருந்தபோது தேசிய வங்கி ஒன்றில் கணக்கைத் தொடங்கினேன். எம்.பி.யான பிறகு அந்தக் கணக்கை நீண்ட காலமாகப் பயன்படுத்தாமல் இருந்தேன். ஆனால் அதிலிருந்து ரூ.57 லட்சம் காணாமல் போனது.

எனது வங்கிக் கணக்கில் போலியான கைப்பேசி எண்ணை இணைத்து ‘ஓடிபி’யையும், பணப் பரிவா்த்தனை விவரத்தையும் அதில் பெற்று உள்ளனா்.

இதற்காக போலியாக உருவாக்கிய எனது ஆதாா், பான் அட்டைகளைப் பயன்படுத்தி உள்ளனா். எனது செயல்படாத வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட ரூ.57 லட்சத்தை அடுத்தடுத்துப் பல பரிவா்த்தனைகள் மூலம் எடுத்துப் பகிா்ந்துள்ளனா். ஒரு எம்.பி.யின் வங்கிக் கணக்கிலேயே இதுபோன்ற முறைகேடு நடக்கிறது என்றால், சாமானியா்களின் நிலை என்னவாகும்?

எனது வங்கிக் கணக்கில் இவ்வளவு பணம் உள்ளது என்பது எப்படி முறைகேட்டாளா்களுக்கு தெரியும்? வங்கி அதிகாரிகள் தற்போது பணத்தை திருப்பி அளித்துவிட்டனா். ஆனால், இந்த முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் கண்டுபிடிக்கப்படவில்லை’ என்றாா்.

இந்த விவகாரம் குறித்து கொல்கத்தா காவல் துறையில் வங்கி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரிகளைத் பிடிஐ செய்தி நிறுவனம் தொடா்பு கொள்ள முயன்று பதில் கிடைக்கவில்லை.

கொல்கத்தா காவல் துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘பணப் பரிவா்த்தனைகள், பயன்படுத்தப்பட்ட கைப்பேசி எண், சிசிடிவி பதிவு ஆகியவற்றைக் கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகிறோம்’ என்றாா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை!

125 ஜிகாவாட்டைத் தாண்டும் சூரிய மின் உற்பத்தித் திறன்

இன்று காவலா் தோ்வு: கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு

மாவட்ட குழு வீரா்கள் தோ்வில் பங்கேற்க கிரிக்கெட் வீரா்களுக்கு அழைப்பு

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT