ஜம்மு - காஷ்மீரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் 2,900 கிலோ வெடிப்பொருள்களை காவல் துறையினர் இன்று (நவ. 10) கைப்பற்றியுள்ளனர்.
இதன்மூலம் பயங்கரவாதிகளின் மிகப்பெரிய தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ் -இ- முகமது மற்றும் அன்சார் கஸ்வாட் -உல்- ஹிந்த் இயக்கங்களைச் சேர்ந்த 2 மருத்துவர்கள் உள்பட 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் காவல் துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,
''ஜம்மு - காஷ்மீரில் கைது செய்யப்பட்டவர்கள் மீது உபா உள்பட 15 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் ஸ்ரீநகர் காவல் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மற்றவர்கள் எளிதில் அணுக முடியாத வகையில் குறியீடுகள் மூலம் இவர்கள் தகவல் பரிமாற்றங்களை செய்துகொண்டிருந்துள்ளனர். இதன் மூலமே நிதி திரட்டுவது, ஆயுதங்கள் கொள்முதல், வெடிப்பொருள்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை இவர்கள் செய்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக ஸ்ரீநகர், அனந்தநாக், கந்தர்பால், ஷோபியான் ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்திலும் உத்தரப் பிரதேச மாநிலம் ஷஹாரான்பூரிலும் அம்மாநில காவல் துறை ஒருங்கிணைப்புடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 2,900 கிலோ வெடிப்பொருள்களுடன் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்புப் பொருள்கள், ஆயுதங்கள், வெடிகுண்டுகள், கை துப்பாக்கிகள், ஏகே - 65 துப்பாக்கிகள், பேட்டரிகள், வயர்கள், டைமர்கள், மின்னணு சர்க்கியூட்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | 12 சூட்கேஸ், 20 டைமர்! ஃபரிதாபாத் வெடிபொருள் பறிமுதலில் திடீர் திருப்பம்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.