தில்லியில் கார் வெடித்து விபத்துக்குள்ளான இடத்தின் அருகே வெடிக்காத தோட்டா கண்டறியப்பட்டுள்ளது.
கார் வெடித்து விபத்துக்குள்ளான இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறையினர் ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி வரும் நிலையில், வெடிக்காத தோட்டா கண்டறியப்பட்டுள்ளது.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று மாலை 6.50 மணியளவில் கார் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது. சிக்னல் போக்குவரத்து நெரிசலில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்த கார் வெடித்ததால், அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.
மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நடந்த இந்த விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 24 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் மருத்துவமனையில் இருந்தவாறு உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி விபத்து தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து விபத்து நடந்த இடத்துக்கு அமித் ஷா நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
தில்லியின் பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ரோந்துப் பணிகள் மட்டுமின்றி, தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கார் வெடித்துச் சிதறிய இடத்தில், காரின் பாகங்கள் பல்வேறு இடங்களில் சிதறி விழுந்துள்ளன். இவற்றை சேகரித்து தடயவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதனால், மக்கள் நடமாட்டத்திற்கு அப்பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் கார் வெடித்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, மும்பை, கொல்கத்தா, உத்தரப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தில்லி செங்கோட்டை அருகே வெடித்த கார்: விபத்தா? சதிச்செயலா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.