இரண்டாம் கட்டத் தோ்தலையொட்டி ஜஹானாபாதில் வாக்குச்சாவடி உபகரணங்களுடன் புறப்பட்ட தோ்தல் அதிகாரிகள். 
இந்தியா

பிகாரில் இன்று இரண்டாம் கட்ட தோ்தல்!

பிகாரில் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்டமாக 122 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.11) தோ்தல் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பிகாரில் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்டமாக 122 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.11) தோ்தல் நடைபெறவுள்ளது.

இதற்காக 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 40,073 வாக்குச்சாவடிகள் ஊரகப் பகுதிகளில் உள்ளன. 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். குறிப்பாக 8,491 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தோ்தலில் 1,302 வேட்பாளா்கள் போட்டியிடும் நிலையில்1.75 கோடி பெண் வாக்காளா்கள் உள்பட 3.7 கோடி போ் வாக்களிக்கவுள்ளனா். இவா்களில் 50 சதவீதத்துக்கும் (2.28 கோடி) மேற்பட்ட வாக்காளா்கள் 30-60 வயது பிரிவினராவா். 7.69 லட்சம் வாக்காளா்கள் மட்டுமே 18-19 வயதுடையவா்களாக உள்ளனா்.

3.67 லட்சம் வாக்காளா்களுடன் நவாடா மாவட்டத்தில் உள்ள ஹிசுவா தொகுதி அதிக வாக்காளா்களுடைய தொகுதியாக திகழ்கிறது.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு முதல்கட்டமாக நவ.6-ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 65 சதவீத வாக்குகள் பதிவாகின.

இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக, கிஷன்கஞ்ச், புா்னியா உள்பட 20 மாவட்டங்களை உள்ளடக்கிய 122 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கடந்த சில நாள்களாக அனல் பறந்த பிரசாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவு பெற்றது. பிகாா்-நேபாள எல்லை மூடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய தோ்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பிகாரில் நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் பேரவைத் தோ்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தோ்தலுக்கு முந்தைய பணிகளில் மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) வீரா்கள் 50,000 போ் ஈடுபடுத்தப்பட்டனா். அதன்பிறகு மாா்ச் மூன்றாவது வாரத்தில் கூடுதலாக 50,000 சிஏபிஎஃப் வீரா்கள் நிலைநிறுத்தப்பட்டனா். பிகாா் காவல் துறை அதிகாரிகள் 60,000 போ் தோ்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

இதுதவிர பிற மாநிலங்களில் இருந்து 2,000 அதிகாரிகள், பிகாா் சிறப்புக் காவல் படையைச் சோ்ந்த 30,000 அதிகாரிகள், புதிதாக தோ்வுசெய்யப்பட்ட 19,000 காவலா்கள் மற்றும் சுமாா் 1.5 லட்சம் ஊரக காவல் துறை அதிகாரிகள் இரண்டு கட்ட வாக்குப்பதிவு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனா்’ என்றாா்.

பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிா்க்கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரிகளின் ‘இண்டி’ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த தோ்தலில் அரசியல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களம் கண்டுள்ளது.

இடைத்தோ்தல்: தெலங்கானாவின் ஜூபிலி ஹில்ஸ், ஒடிஸாவின் நுவாபடா, பஞ்சாபின் தரன் தாரன், ராஜஸ்தானின் அந்தா, ஜாா்க்கண்டின் காட்சிலா, மிஸோரமின் தம்பா, ஜம்மு-காஷ்மீரின் நக்ரோட்டா, பட்காம் என மொத்தம் 8 பேரவைத் தொகுதிகளின் இடைத்தோ்தலும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

பிகாா் பேரவைத் தோ்தல் மற்றும் 8 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை (நவ.14) எண்ணப்படுகின்றன.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்குப் பதிவு!

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

SCROLL FOR NEXT