அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையே மிகவும் போற்றப்பட்ட நட்பு எங்கே போனது? என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கு வெறும் 19 சதவீதம் மட்டுமே வரி விதித்திருக்கும் அமெரிக்கா, நம்பத் தகுந்த நாடு அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலக விவகாரங்களுக்கான சிகாகோ கவுன்சில் (சிகாகோ கவுன்சில் ஆன் குளோபல் அஃபேர்ஸ்) நடத்திய நிகழ்வில் கலந்துகொண்ட ரகுராம் ராஜன் பேசியதாவது:
”கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவும் அமெரிக்காவும் மிக நெருங்கிய உறவு கொண்ட நாடாக இருக்கின்றன. இந்த சுழலில் வரிவிதிப்பு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. நான் தலைமைத்துவத்தைப் பற்றி பேசவில்லை, வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி பேசுகிறேன். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற விரும்பவில்லை. அதேநேரம், பாகிஸ்தானுக்கு 19%, இந்தியாவுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. மோடி - டிரம்ப் இடையே மிகவும் போற்றப்பட்ட நட்பு எங்கே போனது?.
உலகிலேயே சீனாவைவிட அதிக வரி விதிக்கப்படும் நாடாக இந்தியா இருந்ததில்லை. இதுபோன்ற செயல்கள் மக்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.
அமெரிக்கா நம்பத்தகுந்த நாடு கிடையாது. 1971 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, போரை நிறுத்தவும் பாகிஸ்தானுக்கு உதவவும் வகையிலும் கடற்படையை அமெரிக்கா அனுப்பியது. அப்போது சோவியத் யூனியன்தான் இந்தியாவுக்கு உதவியது.
க்வாட் அமைப்பில் இந்தியா நல்ல உறவைக் கொண்டுள்ளது, கூட்டு ராணுவப் பயிற்சிகள் நடந்தன. ஆனால், வரி விதிப்பில் இந்தியா ஏமாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தவிர்த்து வர்த்தகம் மேற்கொள்ள இந்தியாவுக்கு மாற்று வாய்ப்புகள் இல்லை. சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. கடுமையான எல்லைப் போர், மோதல்கள் நடந்துள்ளன. சீனாவை இந்தியா சந்தேகிக்கிறது. சீனாவைச் சார்ந்திருப்பதில் கவனமாக இருக்க விரும்புகிறது.” எனத் தெரிவித்தார்.
19% for Pakistan, 50% for india; Where did the Modi-Trump friendship go? Raghuram Rajan!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.