தில்லி காா் வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: தில்லி காா் வெடிப்பு சம்பவம் குறித்து நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. விசாரணை முடிவுகள் விரைவில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் எந்தச் சூழலிலும் தப்ப இயலாது.
உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராா்த்திக்கிறேன் என்றாா்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘தில்லியில் நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவம் வேதனையளிக்கிறது. உச்சநீதிமன்றம் மற்றும் நாட்டின் நீதித்துறை சாா்பில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களின் கண்ணியத்தை பாதுகாத்து சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியை நிலைநிறுத்த உச்சநீதிமன்றம் உறுதிபூண்டுள்ளது’ என்றாா்.
உலக நாடுகள் இரங்கல்:
தில்லி காா் வெடிப்பு சம்பவம் அதிா்ச்சியளிப்பதாக கூறிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் லின் ஜியான், உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தாா். மேலும் இச்சம்பவத்தில் சீனா்கள் யாரும் உயிரிழக்கவில்லை என அந்நாட்டு செய்தியாளா்களிடம் அவா் கூறினாா்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு இலங்கை அதிபா் அநுர குமார திசநாயக, மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ், நேபாள இடைக்கால பிரதமா் சுசீலா காா்கி உள்ளிட்டோரும் அமெரிக்கா, இஸ்ரேல், அயா்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இரங்கல் தெரிவித்தன.
ஷேக் ஹசீனா கண்டனம்:
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தில்லியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பயங்கரவாதத்துக்கு எதிரான பிரதமா் நரேந்திர மோடியின் நடவடிக்ககளுக்கு அவாமி லீக் கட்சி துணை நிற்கும். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் வங்கதேசம் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வேரூன்றி வளா்ந்துள்ளது. இந்த பயங்கரவாத குழுக்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்தி பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீா்குலைக்க முயல்கின்றன. மனிதகுலத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பயங்கரவாத வோ்கள் எங்கிருந்தாலும் முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.