ANI
இந்தியா

ரசாயன தாக்குதல் சதி: கைதான மருத்துவரின் ஹைதராபாத் வீட்டில் குஜராத் பயங்கரவாத தடுப்புப்பிரிவு சோதனை

கைதான மருத்துவரின் ஹைதராபாத் வீட்டில் குஜராத் ஏடிஎஸ் சோதனை

தினமணி செய்திச் சேவை

‘ரிசின்’ விஷ ராசாயனம் தயாரித்து, பயங்ரவாதத் தாக்குதல் நடத்த சதி தீட்டிய குற்றச்சாட்டில் கைதான மருத்துவா் அகமது மொஹிதீன் சையத்தின் ஹைதராபாத் வீட்டில் குஜராத் பயங்கரவாத தடுப்புப்பிரிவு (ஏடிஎஸ்) காவல் துறையினா் சோதனை நடத்தினா்.

அப்போது, அடையாளம் தெரியாத ரசாயனம் மற்றும் சில மூலப்பொருள்கள் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன என்று அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

சீனாவில் மருத்துவப் பட்டம் பெற்ற சையத், ரிசின் என்ற அதிநச்சு ரசாயனத்தைத் தயாரிக்கத் தேவையான ஆராய்ச்சியைத் தொடங்கி, மூலப்பொருள்கள் மற்றும் உபகரணங்களைப் பெற்று, ஆரம்பகட்ட ரசாயனச் செயல்முறையையும் தொடங்கியிருந்தாா்.

இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காந்திநகா் அருகே உள்ள அடலாஜில் சையத் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். சையத்திடம் இருந்து 3 கைத்துப்பாக்கிகள், 30 தோட்டாக்கள் மற்றும் ரிசின் தயாரிப்பதற்கு தேவையான 4 லிட்டா் ஆமணக்கு எண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த ஐ.எஸ். பயங்கரவாதி அபு கதிஜாவின் வழிகாட்டுதலில் இந்தப் பயங்கரவாத சதியில் சையத் ஈடுபட்டதும், பாகிஸ்தானைச் சோ்ந்த பலருடன் இவா் தொடா்பில் இருந்ததும் அடுத்தடுத்து விசாரணையில் தெரிய வந்தது. மேலும், இவருக்காக ஆயுதக் கடத்தில் ஈடுபட்ட ஆசாத் சுலைமான் ஷேக், முகமது சுஹைல் முகமது சலீம் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனா்.

ஹைதராபாத், உ.பி.யில் சோதனை: இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, ஹைதராபாதின் ராஜேந்திரநகா் பகுதியில் உள்ள சையத்தின் வீட்டில் குஜராத் ஏடிஎஸ் குழுவினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையில் விஷ ராசாயனம் தயாரிக்க அவா் வைத்திருந்த ரசாயனம் மற்றும் மூலப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

சையத்துடன் கைது செய்யப்பட்ட ஆசாத் சுலைமான் ஷேக், முகமது சுஹைல் முகமது சலீம் ஆகிய மற்ற இருவரின் உத்தர பிரதேசத்தில் உள்ள வீடுகளிலும் இதேபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டன. எனினும், அங்கு எந்த ஆட்சேபனைக்குரிய பொருளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி செங்கோட்டை அருகே நடந்த காா் குண்டுவெடிப்பு வழக்கில் பிடிபட்ட மற்ற மருத்துவா்களுக்கும், சையத்திற்கும் இடையே இதுவரை எந்தத் தொடா்பும் நிறுவப்படவில்லை என்றும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

தில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர்! டிஎன்ஏ சோதனையில் உறுதி!

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT