தீபாவளிப் பண்டிகையன்றே மிகப்பெரிய வெடிகுண்டு சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டதாகவும், பின்னர் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் தில்லி கார் வெடித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) இரவு 7 மணி அளவில் வெள்ளை நிற ஹூண்டாய் ஐ20 கார், முதலில் மெதுவாக சென்ற நிலையில் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த சம்பவத்தில், 12 பேர் பலியான நிலையில், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தச் சம்பவத்தின் முக்கிய நபராகக் கைது செய்யப்பட்டுள்ள முசாம்மில், செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவத்தில் முன்னதாகவே தானும் உமரும் அங்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.
நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்களின் அடிப்படையிலும், முசம்மிலின் போனில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும், அடுத்தாண்டு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று குண்டுவெடிப்புக்கு திட்டமிட்டதாகவும் அதன் ஒருபகுதியாகத்தான் செங்கோட்டையைச் சுற்றிப் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகைக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதைச் செயல்படுத்த முடியவில்லை என்றும் முசம்மில் காவல் துறை அதிகாரிகளிடம் கூறியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஃபரிதாபாத்தின் அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முசம்மிலின் உதவியாளரும் சக பணியாளருமான உமர், செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் வெடித்ததில் பலியானதாக நம்பப்படுகிறது.
செங்கோட்டை அருகே நடந்த கார்வெடிப்பு தொடர்பான விசாரணையில், ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த மருத்துவ நிபுணர்கள் குழு இதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜம்மு - காஷ்மீர் காவல்துறை இந்த அமைப்பை “வெள்ளை காலர் பயங்கரவாத அமைப்பு” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.