தில்லி அருகே வியாழக்கிழமை காலை பயங்கர வெடி சப்தம் கேட்டதாக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தில்லி மஹிபால்பூர் அருகே பயங்கர வெடி சப்தம் கேட்டதாக இன்று காலை 9.18 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்ததில், எந்த வெடி விபத்தும் கண்டறியப்படவில்லை.
உடனடியாக தகவல் கொடுத்த நபரை காவல்துறையினர் தொடர்புகொண்டு விசாரித்ததில், அவர் குருகிராம் நோக்கி அவ்வழியாக சென்றுகொண்டிருந்தபோது பயங்கர சப்தம் கேட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், தில்லி தௌலா குவான் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்புற டயர் வெடித்ததில் ஏற்பட்ட சப்தம் என்பது கண்டறியப்பட்டது.
மேலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும் தில்லி காவல்துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை காரின் வெடிகுண்டு வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், 13 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தில்லி கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதல் என்று மத்திய அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக நேற்றிரவு அறிவித்தது.
மேலும், தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.