தில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முதுகலை படித்து வரும் ஒரு மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லி செங்கோட்டை அருகே நவ. 10 (திங்கள்கிழமை) அன்று நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவம் பயங்கரவாதிகளின் சதி என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதற்கு முன்னதாகவே இதுதொடர்பான வழக்கின் விசாரணை பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகாமையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உமர், காரை ஓட்டி வந்துள்ளது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஃபரிதாபத்தில் உமருடன் தொடர்பில் இருந்த 3 மருத்துவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹித்துடன் தொடர்பில் இருந்த முகம்மது ஆரிஃப் என்ற மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவு, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், ஆரிஃப்பை இன்று கைது செய்துள்ளனர்.
ஆரிஃப் ஒரு இதய நோய் மருத்துவர். இவர் தில்லி சம்பவம் நடந்த சில நாள்களுக்கு முன்பாக கான்பூரில் ஷாஹீனைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த ஆரிஃப், ஃபரிதாபாத்தில் உள்ள அல்ஃபலா பல்கலைக்கழகத்தில் இளநிலை பயின்றார். 5 மாதங்களுக்கு முன்பு, அவர் கான்பூரில் உள்ள ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரியில் முதுகலை படிப்புக்குச் சேர்ந்துள்ளார்.
அந்த கல்லூரியில் முதலாமாண்டு இதய நோய் நிபுணருக்கு படித்து வருவதாகவும் 2-3 மாதங்களுக்கு முன்பு கவுன்சிலிங்கில் வந்ததாகவும் அவர் கல்லூரி வளாகத்தில் தங்கவில்லை, வெளியில்தான் தங்கியிருக்கிறார் எனவும் அங்குள்ள மற்றொரு மருத்துவ மாணவர் தெரிவித்துள்ளார்.
தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பில் இவருக்கு தொடர்பிருக்கலாம் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.