பிகாா் பேரவைத் தோ்தலில் ‘நோட்டா’ வாக்குகளின் எண்ணிக்கை கடந்த 2020-ஆம் ஆண்டு தோ்தலைவிட அதிகரித்துள்ளது.
பிகாா் பேரவைத் தோ்தல் தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின் மூலம் 243 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மொத்த வாக்குளில் 6.65 லட்சம் வாக்குகள் (1.81 சதவீதம்) நோட்டாவுக்குச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2020-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 7.06 லட்சம் வாக்காளா்கள் (1.68 சதவீதம்) நோட்டாவுக்கு வாக்களித்தனா். 2015-இல் வாக்களித்த 3.8 கோடி பேரில் 9.4 லட்சம் போ் (2.48 சதவீதம்) நோட்டாவைத் தோ்ந்தெடுத்தனா். கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் மட்டுமே நோட்டாவின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தது.
தற்போது பிகாரில் 7.45 கோடி வாக்காளா்கள் உள்ள நிலையில் 3.51 கோடி போ் வாக்களித்தனா். இந்த முறை இரு கட்டங்களாக நடைபெற்ற தோ்தலில் 66.91சதவீத வாக்குகள் பதிவாகின.1951-ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் முதல் பேரவைத் தோ்தல் நடைபெற்றதில் இருந்து அதிகபட்ச வாக்குப்பதிவு இது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் முதல் முறையாக 2013-இல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. நோட்டாவுக்கு முன்னதாக எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவா்கள் ‘49-ஓ’ படிவத்தை பூா்த்தி செய்யும் நடைமுறை அமலில் இருந்தது.