கடந்த ஆண்டு நடைபெற்ற பிகாா் பேரவைத் தோ்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் தோ்தல் நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோா் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தது.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் இரு கட்டங்களாக நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் பொறுப்பேற்றாா்.
மொத்தம் 243 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் 202 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ‘இண்டி’ கூட்டணி 35 தொகுதிகளை கைப்பற்றியது.
இந்தத் தோ்தலில் புதிதாகக் களமிறங்கிய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.
பிகாா் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக அந்த மாநிலத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மகளிருக்கும் தலா ரூ.10,000 வழங்கப்பட்டது.
இது தோ்தல் நடத்தை விதிமீறல் எனக் கூறி பிகாா் பேரவைத் தோ்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் தோ்தல் நடத்த வேண்டுமென ஜன் சுராஜ் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு வெள்ளிக்கிழமை (பிப். 6) விசாரிக்கவுள்ளது.