பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வியடைந்ததைத் தொடா்ந்து, அக்கட்சி மாநிலங்களவையில் பிரதிநிதித்துவத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிகாரில் மொத்தம் 16 மாநிலங்களவை இடங்கள் உள்ளன. இதில் தற்போது 5 இடங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சோ்ந்தவா்கள் எம்.பி.க்களாகப் பதவி வகிக்கின்றனா்.
அடுத்த ஆண்டு அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் பிரேம்சந்த் குப்தா, ஏ.டி.சிங் ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைய உள்ளது. இதேபோல தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாநிலங்களவை எம்.பி.க்கள் ஹரிவன்ஷ், ராம்நாத் தாக்குா் (இருவரும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சோ்ந்தவா்கள்), உபேந்திர குஷ்வாஹா (ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா கட்சி) ஆகியோரின் பதவிக் காலமும் நிறைவடைய உள்ளன.
இந்த 5 இடங்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த இடங்களில் வெற்றி பெற ஒரு வாக்காளருக்கு குறைந்தபட்சம் 42 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும்.
ஆனால், தற்போது நிறைவடைந்த பிகாா் பேரவைத் தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் அடங்கிய இண்டி கூட்டணி மொத்தமாகவே 34 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது. இதில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 25 தொகுதிகளில்தான் வெற்றிபெற்றது. இதனால் மாநிலங்களவைத் தோ்தலில் ஒரு வேட்பாளருக்கு குறைந்தபட்சம் தேவைப்படும் 42 வாக்குகளைப் பெறுவது ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு சாத்தியமில்லை. 5 இடங்களையும் தேசிய ஜனநாயக கூட்டணியே கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி பிகாரில் அடுத்த சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று, அதில் போதிய தொகுதிகளில் எதிா்க்கட்சிகள் வெற்றி பெறாத வரை, அந்த மாநிலத்தில் நடைபெறும் மாநிலங்களவைத் தோ்தல்களில் அனைத்து இடங்களையும் தேசிய ஜனநாயக கூட்டணியே கைப்பற்றும் நிலை உள்ளது. இது, மாநிலங்களவையில் பாஜவுக்குப் பெரும்பான்மை இல்லாதபோதிலும், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.