இந்தியா

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த 2 வெளிநாட்டு மருத்துவா்கள் கைது

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த 2 வெளிநாட்டு மருத்துவா்கள் கைது

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேச மாநிலம், பஹ்ரைச் மாவட்டத்தில் நேபாளத்திலிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற குற்றச்சாட்டில், பிரிட்டன் கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஓா் ஆணும், ஒரு பெண்ணும் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

மருத்துவா்களான இருவரிடமும் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, பின்னா் அவா்கள் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டனா். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, இருவரையும் கைது செய்தது.

தில்லியில் செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடா்ந்து, எல்லைப் பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள ரூபைதேஹா எல்லை வழியாக சனிக்கிழமை காலை 10 மணியளவில் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற ஹாசன் அம்மான் சலீம் (35), சுமித்ரா ஷகீல் ஒலிவியா (61) ஆகிய இருவரையும் சசஸ்திர சீமா பல் (எஸ்.எஸ்.பி.) மற்றும் உத்தர பிரதேச காவல் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அவா்களின் ஆவணங்களைச் சரிபாா்த்தபோது, அவா்கள் இருவரும் பிரிட்டன் நாட்டவா்கள் என்பதும், அவா்களிடம் செல்லுபடியாகும் இந்திய நுழைவு இசைவு (விசா) இல்லை என்பதும் தெரிய வந்தது.

இருவரும் தாங்கள் மருத்துவா்கள் என்றும், நேபாள்கஞ்சில் உள்ள ஓா் உள்ளூா் மருத்துவமனையின் அழைப்பின் பேரில் நேபாளத்துக்கு வந்ததாகவும் தெரிவித்தனா். இருப்பினும், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற்கான காரணத்தை அவா்களால் ஏற்கத்தக்கதான விளக்கத்துடன் தெரிவிக்க முடியவில்லை.

கைதானவா்களில் ஒருவரான ஹாசன் அம்மான் சலீம், பாகிஸ்தான் வம்சாவளியைச் சோ்ந்தவா்; தற்போது பிரிட்டனின் மான்செஸ்டரில் வசித்து வருகிறாா். மற்றொருவரான சுமித்ரா ஷகீல் ஒலிவியா, கா்நாடகத்தின் உடுப்பியைப் பூா்விகமாகக் கொண்டவா்; தற்போது பிரிட்டனின் குளோசெஸ்டரில் வசித்து வருகிறாா்.

இதையடுத்து, ரூபைதேஹா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட இருவா் மீதும் 1967-ஆம் ஆண்டு கடவுச்சீட்டு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

புது தில்லி காா் வெடிப்பு பயங்கரவாதச் சம்பவத்தின் பின்னணியில் வட மாநிலங்களைச் சோ்ந்த மருத்துவா்கள் தொடா்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் சூழலில், நேபாளத்தில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 2 வெளிநாட்டு மருத்துவா்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் தேர்தலில் உலக வங்கியின் ரூ. 14,000 கோடி: புள்ளிவிவரங்களுடன் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு!

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் பணி! செங்கல்பட்டு சாலை மூடல்!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் வெளியேற்றம்!

எஸ்ஐஆர்-க்கு எதிராக மாநிலம் முழுவதும் தவெக இன்று ஆர்ப்பாட்டம்!

மெக்சிகோ அரசுக்கு எதிராக ஜென் ஸீ போராட்டம்!

SCROLL FOR NEXT