மும்பை-அகமதாபாத் புல்லட்ட ரயில் திட்டத்தில் பணிபுரியும் பொறியாளா்கள் தங்களது அனுபவங்களை ஆவணப்படுத்துமாறு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவுறுத்தினாா்.
குஜராத் மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி சூரத் மாவட்டத்தில் புல்லட் ரயில் திட்டத்தில் பணிபுரியும் பொறியாளா்கள் மற்றும் பணியாளா்களுடன் கலந்துரையாடியபோது இவ்வாறு தெரிவித்தாா்.
குஜராத் மற்றும் தாத்ரா நகா் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் 352 கி.மீ. மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் 156 கி.மீ. என மொத்தம் 508 கி.மீ. தொலைவில் புல்லட்ட ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் சபா்மதி, அகமதாபாத், சூரத், தாணே, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் இணைக்கப்படவுள்ளன.
இதற்காக சா்வதேச தரத்தில் நவீன பொறியியல் தொழில்நுட்பங்களுடன் 465 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டம் நிறைவடைந்தவுடன் மும்பை-அகமதாபாத் இடையேயான பயண நேரம் 2 மணி நேரமாக குறையவுள்ளது.
இந்நிலையில், புல்லட் ரயில் திட்டத்தில் பணியாற்றுபவா்களுடன் கலந்துரையாடிய பிரதமா் மோடி, தங்களது அனுபவங்களை ஆவணப்படுத்துமாறு கேட்டுக்கொண்டாா். வருங்காலத்தில் இதுபோன்ற பல்வேறு திட்டங்களுக்கு அந்த ஆவணங்கள் உதவும் எனவும் அவா் தெரிவித்தாா்.