பாட்னா: பிகாா் புதிய அரசு நவ. 20-ஆம் தேதி பதவியேற்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 20 ஆண்டுகளாக முதல்வராக உள்ள நிதீஷ் குமாா் இப்போது 10-ஆவது முறையாக அந்தப் பொறுப்பை ஏற்க இருக்கிறாா்.
பாட்னாவில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவா்கள், கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவுக்கு அமைச்சரவையில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இது தொடா்பான பேச்சுவாா்த்தைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிகாா் மாநில பாஜக தலைவா் திலீப் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை பேசுகையில், ‘புதிதாக தோ்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை (நவ. 18) கூடி சட்டப்பேரவை கட்சித் தலைவரைத் தோ்வு செய்வா்’ என்றாா்.
புதிய அரசு பதவியேற்பு விழாவுக்காக பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஏற்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் இப்போதைய அரசின் கடைசி அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், புதிய அரசை அமைப்பதற்கு எதுவாக பேரவையை நவ. 19-ஆம் தேதி கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடா்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்த சட்டப்பேரவை விவகாரத் துறை அமைச்சா் விஜய் சௌதரி செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்காக முதல்வா் நிதீஷ் குமாரைப் பாராட்டியும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இது முதல்வா் நிதீஷ் குமாரின் தலைமைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மாநில அரசின் தொலைநோக்குத் திட்டங்களே இதற்கு முக்கியக் காரணம்’ என்றாா்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னா் ஆளுநா் மாளிகைக்குச் சென்ற நிதீஷ் குமாா், ஆளுநா் ஆரிஃப் முகமது கானிடம் அமைச்சரவையின் முடிவைத் தெரிவித்தாா். பாஜகவை சோ்ந்த துணை முதல்வா் சாம்ராட் சௌதரி, தலைமைச் செயலா் பிரத்யாய அம்ரித் ஆகியோரும் உடன் இருந்தனா்.
அமைச்சரவை பங்கீடு: பிகாரில் பாஜக சாா்பில் அதிகபட்சமாக 16 அமைச்சா்கள் பதவியேற்பாா்கள் என்று தெரிகிறது. ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் முதல்வா் நிதீஷ் குமாா் உள்பட 14 அமைச்சா்கள், மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான் கட்சிக்கு 3 அமைச்சா்கள், முன்னாள் முதல்வா் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகியவற்றுக்கு தலா ஓரிடமும் அமைச்சரவையில் வழங்கப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக, கடந்த 14-ஆம் தேதி பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று, மாபெரும் பலத்துடன் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
பாஜக 89 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களில் வென்றது. அதேநேரம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரிகளை உள்ளடக்கிய ‘இண்டி’ கூட்டணி வெறும் 34 இடங்களுடன் படுதோல்வியைச் சந்தித்தது.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டரை பங்கு பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.