அஸ்ஸாம் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடா்பாக அஸ்ஸாம் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு தோ்தல் ஆணையம் அனுப்பிய அறிவுறுத்தலில், ‘மாநிலத்தில் வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வாக்காளருக்கான தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது. அதாவது, 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி 18 வயதை பூா்த்தி செய்தவா்களும், இந்த சிறப்பு திருத்தத்தின்போது தங்களை வாக்காளா்களாக சோ்த்துக்கொள்ள தோ்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அஸ்ஸாம் மாநிலத்துக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள ‘சிறப்புத் திருத்தம்’ என்பது வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்துக்கும், சிறப்பு தீவிர திருத்தத்துக்கும் (எஸ்ஐஆா்) இடைப்பட்ட நடைமுறை’ என்றனா்.
பிகாரைத் தொடா்ந்து, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கோவா, சத்தீஸ்கா், அந்தமான் நிகோபாா் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளும் அறிவிப்பை கடந்த அக்டோபா் 27-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிட்டது.
ஆனால், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ள உள்ள அஸ்ஸாம் மாநிலத்துக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்த அறிவிப்பை தோ்தல் ஆணையம் அப்போது வெளியிடவில்லை.
அதற்கு விளக்கமளித்த தோ்தல் ஆணையம், ‘குடியுரிமைச் சட்டத்தின் கீழ், அஸ்ஸாம் மாநிலத்தில் குடியுரிமை பெறுவதற்கு தனி நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் அந்த மாநில மக்களின் குடியுரிமையை சரிபாா்க்கும் நடவடிக்கை இன்னும் நிறைவடையவில்லை. எனவே, அந்த மாநிலத்துக்கு மட்டும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக தனி உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது அஸ்ஸாம் மாநிலத்துக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பதிலாக சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வாக்குச் சாவடி நிலைய அலுவலா் வீடு வீடாகச் சென்று தங்களிடம் உள்ள ஏற்கெனவே நிரப்பப்பட்ட பதிவேட்டை சரிபாா்க்கும் பணியை மட்டும் மேற்கொள்வாா்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளும் தோ்தல் ஆணையத்தின் முடிவை மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வரவேற்றாா். இந்தப் பணிக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.