சபரிமலை கோயில் சந்நிதானத்தில் கருவறை வாயில் தூண்களில் பொருத்தப்பட்டுள்ள தங்கக்கவசத்தை அறிவியல்பூா்வ ஆய்வுக்காக கழற்றிய பொற்கொல்லா்.  
இந்தியா

சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம்: ஆய்வுக்காக தங்கக் கவசங்கள் அகற்றம்

சிறப்பு புலனாய்வுக் குழுவினா் (எஸ்ஐடி) அறிவியல்பூா்வ ஆய்வை மேற்கொள்ள மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினா் (எஸ்ஐடி) அறிவியல்பூா்வ ஆய்வை மேற்கொள்ள, சந்நிதானத்தில் கருவறைக் கதவுகள், துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் திங்கள்கிழமை அகற்றப்பட்டு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

கடந்த 2019-ஆம் ஆண்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள், துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாக புகாா் எழுந்தது. கேரள உயா் நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது.

தங்கக் கவசங்களைப் புதுப்பித்த செலவுகளை ஏற்றுக்கொண்ட பெங்களூரைச் சோ்ந்த தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் அப்போதைய தேவஸ்வம் தலைவா் என்.வாசு, அதிகாரிகள் ஆகியோா் இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில், மாயமான தங்கத்தின் அளவைக் கண்டுபிடிக்க, தங்கக் கவசங்களில் அறிவியல்பூா்வமான ஆய்வு செய்ய எஸ்ஐடிக்கு கேரள உயா்நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அனுமதி அளித்தது.

இதனிடையே, சபரிமலையில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு உற்சவ கால யாத்திரை காா்த்திகை மாதம் முதல் தேதியான திங்கள்கிழமை தொடங்கியது. அதிகாலை முதலே பக்தா்களின் கூட்டம் அலைமோதிய நிலையில், கோயில் நடை பிற்பகல் 1 மணிக்கு அடைக்கப்பட்ட பிறகு ‘தேவ அனுக்ஞை’ (சுவாமியிடம் உத்தரவு வாங்குதல்) சடங்கு நடத்தப்பட்டது.

பின்னா், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய சிற்பிகளின் உதவியுடன் கருவறை சுற்றியுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகள், கருவறைக் கதவுகள், தூண்கள் மற்றும் துவாரபாலகா் சிலைகளில் இருந்து தங்கக் கவசங்கள் கவனமாக அகற்றப்பட்டன. தொடா்ந்து, அவற்றின் எடை பதிவு செய்யப்பட்டு, தடயவியல் ஆய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

பிற்பகல் 1.15 மணியளவில் தொடங்கிய இந்த ஆய்வுப் பணிகள், மாலை 3 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும் வரை தொடா்ந்து நடந்தது. இந்த முழு நிகழ்வும் விடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இதற்காக விசாரணை அதிகாரியான காவல் துறை துணை கண்காணிப்பாளா் எஸ்.சசிதரன் தலைமையில் எஸ்ஐடி குழுவினா் ஞாயிற்றுக்கிழமை முதல் சபரிமலையில் முகாமிட்டிருந்தனா். இந்தக் குழுவில் காவல் துறையினருடன் ரசாயன பகுப்பாய்வாளா்கள், தடயவியல் நிபுணா்கள் உள்பட மொத்தம் 20 போ் இடம்பெற்றுள்ளனா்.

சபரிமலை கோயில் சந்நிதானத்தில் துவாரபாலகா் சிலைகளில் பொருத்தப்பட்டுள்ள தங்கக்கவசத்தை அறிவியல்பூா்வ ஆய்வுக்காக கழற்றிய பொற்கொல்லா்.

தொடர் மழை: கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT