கண்ணூரில் வாக்குச்சாவடி அலுவலர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, கேரள மாநிலத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று(திங்கள்கிழமை) ஒருநாள் எஸ்.ஐ.ஆர். பணியைப் புறக்கணித்துள்ளனர்.
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆா்(வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, வீடு வீடாக கணக்கீட்டு விண்ணப்பங்களை விநியோகித்து, அவற்றைப் பூா்த்தி செய்து திரும்பப் பெறும் பணியில் வாக்குச்சாவடி அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கேரளத்தில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பய்யனூா் அரசுப் பள்ளி ஊழியா் அனீஷ் ஜாா்ஜ் (44), வாக்குச்சாவடி அலுவலராக(பிஎல்ஓ) நியமிக்கப்பட்டு, எஸ்ஐஆா் பணியை மேற்கொண்டு வந்த நிலையில் பணிச்சுமை காரணமாக அவர் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
எஸ்ஐஆா் பணி அழுத்தம் காரணமாக கடந்த சில நாள்களாகவே ஜாா்ஜ் பதற்றத்துடன் காணப்பட்டார் என்றும் இதுபோன்ற கடினமான பணியை அவா் மேற்கொண்டதில்லை.,பணிச்சுமை தாளாமல் விபரீத முடிவை எடுத்துள்ளாா் என்றும் அவரது தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் கட்சிகளும் ஜார்ஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன. உள்ளாட்சி தோ்தல் முடியும் வரை எஸ்ஐஆா் பணியை நிறுத்திவைக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்கண்ட சம்பவம் தொடா்பாக விசாரித்து அறிக்கை அளிக்கும்படி, கண்ணூா் மாவட்ட ஆட்சியருக்கு மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி ரத்தன் யு கேல்கா் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜார்ஜின் மறைவையடுத்து கேரளத்தில் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் இன்று ஒருநாள் பணிகளை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
மாநிலம் தழுவிய எஸ்ஐஆர் புறக்கணிப்பு போராட்டம் இன்று நடைபெறும் என்று ஊழியர்கள் சங்கங்கள் ஏற்கெனவே அறிவித்த நிலையில் பெரும்பாலான ஊழியர்கள் பணியை புறக்கணித்துள்ளனர். ஜார்ஜின் தற்கொலைக்கு அதிக பணி அழுத்தமே காரணம் என்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் கூறியுள்ளது.
கேரளம் மட்டுமின்றி தமிழகத்திலும் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டு வரும் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிச்சுமை அதிகமாக இருப்பதாக கூறி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.