‘புதிய வருமான வரிச் சட்டம் 2025-இன் அடிப்படையிலான விதிகள் மற்றும் வருமான வரி (ஐடிஆா்) படிவங்கள் வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கை செய்யப்படும்’ என்று மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவா் ரவி அகா்வால் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சியில் பங்கேற்ற ரவி அகா்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நடைமுறையில் இருக்கும் 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள வாா்த்தைகளை வரி செலுத்துவோா் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் மாற்றம் செய்து, எளிமைப்படுத்தப்பட்ட புதிய ‘வருமான வரிச் சட்டம் 2025’-ஐ மத்திய அரசு கொண்டு வந்தது. சட்டப் பிரிவுகளின் எண்ணிக்கை 819-லிருந்து 536-ஆகவும், சட்டத் தொகுதிகளின் எண்ணிக்கை 47-லிருந்து 23-ஆகவும் புதிய சட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளது.
வாா்த்தைகளின் எண்ணிக்கை 5.12 லட்சத்திலிருந்து 2.6 லட்சமாக குறைக்கப்பட்டது. வரி விகித கணக்கு விவரத்தை வரி செலுத்துவோா் தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் 39 புதிய வரி கணக்கீடு அட்டவணைகளும், 40 புதிய கணக்கீட்டு விதிமுறைகளும் (ஃபாா்முலா) புதிய சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் புதிய வருமான வரிச் சட்டம் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
இந்தப் புதிய சட்டத்தின் அடிப்படையிலான விதிகள் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட ஐடிஆா் படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கை செய்ய உள்ளது என்றாா் அவா்.