தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 2 வது நபரான ஜசிர் பிலால் வானியை 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க தேசிய புலானாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளுக்கு தில்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று (நவ. 18) உத்தரவிட்டுள்ளது.
கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஜசிர் பிலாலை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய என்ஐஏ, குண்டு வெடிப்பு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தது.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே கடந்த 10 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் கடும் நெரிசலுக்கு மத்தியில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அருகில் இருந்த வாகனங்களும் தீக்கிரையாகின. இச்சம்பவத்தில் 15 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா காவல் துறை உதவியுடன் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.
இச்சம்பவத்தில் வெடித்துச் சிதற பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் அமீர் ரஷித் அலி என்பவரை விசாரணை அமைப்பினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தில்லி கார் வெடிப்பு சம்பவத்தை, பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்தது.
காரை ஓட்டிச் சென்ற மருத்துவர் உமர் மற்றும் அவரின் பின்னணி குறித்து விசாரணையின் மூலம், இந்தத் தாக்குதலானது தற்கொலைப்படை தாக்குதல் என்பதை என்ஐஏ அதிகாரிகள் உறுதி செய்தனர்.
உமருக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவியதாக ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த ஜசிர் பிலால் வானி என்பவரை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அவரை பலத்த பாதுகாப்புடன் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்திலுள்ள என்ஐஏ விசாரணை நீதிபதி முன்பு அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.
கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபரை ஆஜர்படுத்தவுள்ளதால், நீதிமன்றங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, ஆஜர்படுத்துவதற்கு முன்பு நீதிமன்ற வளாகம் முழுக்க சோதனையிடப்பட்டது. பின்னரே ஜசிர் பிலாலை அதிகாரிகள் ஆஜர்படுத்த நீதிமன்றத்திற்குள் அழைத்துச்சென்றனர்.
நீதிமன்றத்தில் தனி அறையில் நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்திரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க என்ஐஏவுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிக்க | ஒரு நாளில் 1,000 கி.மீ.! 5 நாள்களில் 5,400 கி.மீ. தூரம் கடந்த பறவை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.