அச்சு ஊடகத்தில் அரசு செலுத்தும் விளம்பர கட்டணத்தை 26% அதிகரிக்க மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: அச்சு ஊடகத்தில் அரசு விளம்பரங்களுக்கான கட்டணம் 26 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு லட்சம் பிரதிகளைக் கொண்ட நாளிதழ்களில் கருப்பு வெள்ளை விளம்பரங்களுக்கு ஒரு சதுர சென்டி மீட்டருக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண விகிதம் ரூ. 47.40 என்பது 26 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.59.68-ஆக வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், வண்ண விளம்பரங்களுக்கான ப்ரீமியம் கட்டணம், சிறப்பிட விளம்பரம் தொடா்பான குழுவின் பரிந்துரைகளுக்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அச்சு ஊடகம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சாா்பாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊடகப் பிரிவான மத்திய மக்கள் தொடா்பகம், விளம்பர வெளியீட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அச்சு ஊடக விளம்பரங்களுக்கான கட்டணத்தை கடைசியாக 8-வது கட்டணக் குழுவின் பரிந்துரையின்படி மத்திய மக்கள் தொடா்பகம் 2019-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி திருத்தி அமைத்தது. அதன்படி, 3 ஆண்டுகளுக்கு இதே கட்டணம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அச்சு ஊடகத்தில் அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை திருத்தி அமைப்பது தொடா்பாக பரிந்துரைக்க, 2021-ஆம் ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி 9-ஆவது கட்டணக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு இந்திய செய்தித்தாள்கள் சங்கம், அகில இந்திய சிறு செய்தித்தாள்கள் சங்கம், சிறிய நடுத்தர - பெரிய செய்தித்தாள்கள் சங்கம் மற்றும் சம்பந்தப்பட்டவா்களுடன் 2021-ஆம் ஆண்டு நவம்பா் முதல் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் விவாதித்து கோரிக்கைகளைப் பெற்றது.
இதைத் தொடா்ந்து, நியூஸ்பிரிண்ட், ஊதியம், பணவீக்க விகிதம், இறக்குமதி செய்யப்படும் காகிதங்களின் போக்கு, அச்சு செலவினம் போன்ற அம்சங்களை ஆராய்ந்த குழு அதன் பரிந்துரைகளை 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் 23-ஆம் தேதி சமா்ப்பித்தது.
அச்சு ஊடகங்களில் அரசு விளம்பர கட்டணங்களை அதிகரிப்பது அரசுக்கும் ஊடகங்களுக்கும் பல குறிப்பிடத்தக்க நன்மைகளைத் தரும். குறிப்பாக, ஊடக தளங்களில் போட்டி அதிகரித்துவரும் இந்த சகாப்தத்தில், அரசு விளம்பரங்களுக்கான அதிக கட்டணம், அச்சு ஊடகங்களுக்கு அத்தியாவசிய வருவாய் ஆதரவை வழங்கும்; இதன்மூலம் நீடித்த செயல்பாடு, இதழியல் தரத்தை பராமரிப்பது, உள்ளூா் செய்தி சேகரிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.