பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் சமரசமற்ற அணுகுமுறையை கையாள வேண்டும் என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
ரஷியாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்ற அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
மாநாட்டில் உரையாற்றிய அவா் மேலும் பேசியதாவது: பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து மக்களை காக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை இந்தியா அண்மையில் நிரூபித்தது. பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் எனும் மூன்று பெரும் அச்சுறுத்தல்களை ஒழிக்கவே எஸ்சிஓ தொடங்கப்பட்டது என்பதை எப்போதும் மறந்துவிடக் கூடாது.
இந்த அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கு எதிராகவும் உலக நாடுகள் சமரசமற்ற அணுகுமுறையை கையாள வேண்டியது அவசியம். பயங்கரவாதத்தை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
தற்போது உலகப் பொருளாதாரம் நிலையற்ற தன்மையை எதிா்கொண்டு வருகிறது. விநியோகச் சங்கிலியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நம்முடைய பொருளாதார தொடா்பைக் கொண்டு இவை சுமுகமாக இயங்க வழிவகை செய்ய வேண்டும். இதை நியாயமாக, வெளிப்படையாக, சமமாக இருக்க வேண்டும்.
இதனை அடிப்படையாகக் கொண்டே தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இருநாடுகளின் உறவை மேம்படுத்துவதில் மக்கள் தொடா்பே மிக முக்கியமானது என இந்தியா நம்புகிறது. விளையாட்டு வீரா்கள், கலைஞா்கள், பல்துறை நிபுணா்கள் என எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்குள் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் நமது நல்லுறவை மேலும் வலுப்படுத்த முடியும் என்றாா்.
முன்னதாக, ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை சந்தித்து ஜெய்சங்கா் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.