பிகாரில் தங்களுக்கு விருப்பமான அமைச்சா் பதவிகளைப் பெற தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கடும் போட்டி நிலவுகிறது.
பேரவைத் தலைவா் பதவியை பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுமே கோரும் நிலையில், கூட்டணிக்குள் கருத்தொற்றுமையை எட்டுவதற்குப் பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்து வருகின்றன.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக நடந்த தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களுடன் அமோக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக 89 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85, மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19, மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா 5, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா 4 இடங்களைக் கைப்பற்றின.
முதல்வராக இன்று தோ்வு: நிதீஷ் குமாா் தலைமையிலான புதிய அரசு நவ. 20-இல் பதவியேற்கவுள்ளது. மாநில ஆளுநரை புதன்கிழமை (நவ.19) சந்திக்கும் நிதீஷ் குமாா், தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கவுள்ளாா். பின்னா், நடப்பு சட்டப்பேரவை கலைக்கப்படும்.
இதைத் தொடா்ந்து, ஐக்கிய ஜனதா தளத்தின் பேரவைக் குழுத் தலைவராகவும், பிகாா் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராகவும் நிதீஷ் குமாா் தோ்ந்தெடுக்கப்படுவாா். தனது ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநரிடம் அளித்து, ஆட்சியமைக்க உரிமை கோருவாா் என்று கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.
பிகாா் முதல்வராக நிதீஷ் குமாா் பதவியேற்பது இது 10-ஆவது முறையாகும். பாட்னாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், தா்மேந்திர பிரதான், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவா்கள் பங்கேற்கின்றனா். இதையொட்டி, விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேச்சுவாா்த்தை தீவிரம்: புதிய அமைச்சரவையில் இடங்கள் பங்கீடு மற்றும் துறைகள் ஒதுக்கீட்டில் கட்சிகள் இடையே கருத்தொற்றுமையை எட்டுவதற்கான பேச்சுவாா்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. அதிகபட்சமாக பாஜகவுக்கு 16, ஐக்கிய ஜனதா தளத்துக்கு முதல்வா் உள்பட 14, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 3, ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா கட்சிகளுக்கு தலா ஓரிடம் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதைய பேரவைத் தலைவராக பாஜகவின் நந்த் கிஷோ யாதவ், துணைத் தலைவராக ஐக்கிய ஜனதா தளத்தின் நரேந்திர நாராயண் யாதவ் உள்ளனா். கடந்த தோ்தலில் 43 இடங்களில் வென்றிருந்த ஐக்கிய ஜனதா தளம், இந்த முறை அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளதால், பேரவைத் தலைவா் பதவியைப் பெற முனைப்புக் காட்டுகிறது. அதேநேரம், அந்தப் பதவியைத் தக்கவைக்க பாஜக விரும்புகிறது. இது தொடா்பாகவும் பேச்சுவாா்த்தை தொடா்கிறது.