பெண்களின் உடல்நலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டு நலம் பெற்றிருக்கும் நடிகை மஹிமா சௌத்ரி பல விஷயங்களைப் பேசி வருகிறார்.
இளம் பெண்களிடையே நேரிடும் மார்பகப் புற்றுநோய் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய நடிகை மஹிமா, ஒரு தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
அதாவது, அனைத்துப் பெண்களும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு ஆண்டுதோறும் கண்டிப்பாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நோய்களை எதிர்த்துப் போராடுவதில், முன்னெச்சரிக்கையும், முன்கூட்டியே நோயை கண்டறிதலும்தான் மிகச் சிறந்த வழிமுறைகள் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
எந்த சமரசமும் இன்றி, அனைத்து வயது பெண்களும் நிச்சயம் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தனக்கு கடந்த 2022ஆம் ஆண்டு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக அறிந்த போது தான் அடைந்த வேதனை குறித்தும் அவர் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
எனக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறது என்று அறிந்துகொண்டது மிகவும் ஆச்சரியமூட்டும் விஷயம். காரணம், உரிய பரிசோதனை செய்யப்படாமல், மார்பகப் புற்றுநோயைக் கண்டறியவே முடியாது, அது மிக அமைதியாக வளர்ந்துகொண்டிருக்கும். வெளியே பார்க்க நாம் எவ்வளவு ஆரோக்கியமாக, அழகாக இருக்கிறோம் என்பதெல்லாம் விஷயமே இல்லை என்கிறார்.
எனக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை. நான் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனைக்காகவும் செல்லவில்லை. வழக்கமாக ஆண்டுதோறும் செய்துகொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றேன். எனக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கலாம் என்பதற்கான எந்த சந்தேகமும் கூட எழவில்லை. ஆரம்பக்கட்டத்தில் ஒருவருக்கு புற்றுநோய் இருக்கலாம் என்பதற்கு எந்த அறிகுறியும் இருப்பதேயில்லை. வெறும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மூலமாக மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டால், ஆரம்பக்கட்டத்திலேயே இதனைக் கண்டறிய முடியும் என்கிறார்.
தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோதைக் காட்டிலும் தற்போது புற்றுநோய்க்கு எதிரான மருத்துவ தொழில்நுட்பங்கள் நன்கு வளர்ந்துவிட்டன. தற்போது புற்றுநோய் பாதித்தவர்களும் குணமடைந்து மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. “தற்கொலைத் தாக்குதல் ஒரு தியாகச் செயல்”... தில்லி குண்டு வெடிப்பில் உமர் பேசிய விடியோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.