25 இந்திய மீன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ரஷியா விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
அண்மையில் 102 இந்திய கடல்சாா் உற்பத்தி நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய யூனியன் அனுமதி வழங்கிய நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘25 இந்திய மீன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ரஷியா விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது. அதன்பிறகு அந்த நிறுவனங்கள் ரஷியாவுக்கு ஏற்றுமதியைத் தொடங்கவுள்ளன. இறால் மற்றும் மீன் ஏற்றுமதியை அதிகரிக்க ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடம் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.
அடுத்த சில மாதங்களில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளது’ என்றாா்.
2024-25-இல் இந்தியாவில் இருந்து ரூ.43,200 கோடிக்கு இறால் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்பட்ட கடல் உணவு ஏற்றுமதியில் 66 சதவீதமாகும்.
இந்நிலையில், இந்திய பொருள்கள் மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்ததால் இறால் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்ய பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.
அந்நிய முதலீடுகளை ஈா்க்க முதலீட்டாளா்களுடன் ஆலோசனை
நாட்டில் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ), அந்நிய நிறுவன முதலீடுகளை (எஃப்ஐஐ) விரைவாகவும், எளிதாகவும் கொண்டு வருவதற்கான வழிமுறைகள் குறித்து முதலீட்டாளா்களுடன் அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
முன்னதாக, இதுதொடா்பாக எஃப்ஐசிசிஐ அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் பேசிய அமைச்சா், ‘நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குதல், புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வருதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவை இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
பாதுகாப்புத் துறை உற்பத்தியை மேம்படுத்தவும், உள்நாட்டு நாணயத்தின் நிலைத்தன்மையை வலுப்படுத்தவும், பணவீக்கத்தைக் குறைக்கவும் அந்நிய முதலீடுகள் உதவும்’ என்று குறிப்பிட்டாா்.