ரஷியாவில், புதியதாக 2 இந்தியத் தூதரகங்களை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திறந்துவைத்துள்ளார்.
ரஷியாவின் யெகாடெரின்பர்க் மற்றும் கசான் ஆகிய நகரங்களில் இன்று (நவ. 19) புதியதாக 2 இந்தியத் தூதரகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தத் தூதரகங்களை, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திறந்துவைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், ரஷியாவின் துணை வெளியுறவு அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ மற்றும் ரஷியாவுக்கான இந்தியத் தூதர் வினய் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
“யெகாடெரின்பர்க்கில் உள்ள தொழிற்சாலைகளால் அந்நகரம் ரஷியாவின் மூன்றாவது தலைநகர் என்றழைக்கப்படுகிறது. இந்தத் தூதரகங்கள் மூலம், இந்தியா மற்றும் ரஷியா இடையிலான அறிவியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வளர்ச்சியடைய முடியும்.
கசான் நகரம் அதன் எண்ணெய், உரங்கள், வாகனங்கள், பாதுகாப்பு கட்டமைப்புகள் ஆகிவற்றின் உற்பத்திகளால் பிரபலமாக அறியப்படுகின்றது” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், ரஷியாவில் சுமார் 30,000 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும்; அதில், 7,000 பேர் கசான் தூதரகத்தின் கட்டுப்பாட்டிலும், 3,000 பேர் யெகாடெரின்பர்க் தூதரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரஷியாவின் மாஸ்கோ நகரத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு இன்று காலை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மலர்தூவி மரியாதைச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக 272 பேர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.