பிகார் முதல்வராக நிதீஷ் குமார் வியாழக்கிழமை காலை பதவியேற்கவுள்ள நிலையில், துறைகள் ஒதுக்கீடு குறித்து பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளக் கட்சிகளின் தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 202 தொகுதிகளில் வென்று மாபெரும் பலத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமார் 10-வது முறையாக முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நாளை காலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பதவியேற்கவுள்ளனர்.
இந்த நிலையில், பதவியேற்புக்கு முன்னதாக அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சரவையில் பாஜகவுக்கு 16 இடங்கள், ஐக்கிய ஜனதா தளத்துக்கு முதல்வர் பதவி உள்பட 15 இடங்கள், சிராக் பாஸ்வான் கட்சிக்கு 3 இடங்கள், மற்ற இரு கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, உள்துறை மற்றும் கல்வித்துறையைக் கைப்பற்ற பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு இடையே போட்டி நிலவுவதாகவும், இரு கட்சிகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சிராக் பாஸ்வான் கட்சியும் சில முக்கிய துறைகளைக் கோரி வருகின்றது.
சட்டப்பேரவைத் தலைவருக்கான போட்டியில் பாஜகவின் பிரேம் குமார் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் விஜய் செளத்ரி ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் தனித்தனியாக இன்று காலை பாட்னாவில் நடைபெறவுள்ளது.
இதில், அமைச்சரவையில் இடம்பெறுபவர்களின் பெயர்களை அந்தந்தக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, இன்று மாலை ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளனர்.
கடந்த முறை போன்று, இம்முறையும் முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த இருவர் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.