தனது குடும்பத்திற்கும் அலுவலக வேலைக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுப்பதாக நடிகர் ராம் சரணின் மனைவியும் தொழிலதிபருமான உபாசனா கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் ஐஐடி மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், தன்னுடைய வாழ்க்கையில் எடுத்த முடிவுகள் பற்றியும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி தங்களுக்கான குறிக்கோளையும் அடையவும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் பேசினார்.
உங்களுடைய கருமுட்டையை உறைய வைத்து உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் பொருளாதாரரீதியாக யாரையும் சார்ந்திருக்கக் கூடாது, அந்த நிலையில் திருமணம் செய்யுங்கள் என்றும் கூறியிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் பலரும் உபாசனாவின் கருத்துக்கு பதில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
பெண்கள் முதல் முன்னுரிமை அளிக்க வேண்டியது திருமணமா, வேலையா என சமூக ஊடங்களில் பல உரையாடல்கள் நடந்து வருகின்றன. பெண்கள் பலரும் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளையும் சிக்கல்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
உபாசனாவின் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் உபாசனா இதற்கு பதில் அளிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஆரோக்கியமான விவாதத்தைத் தூண்டியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன், உங்கள் மரியாதைக்குரிய பதில்களுக்கு நன்றி.
நீங்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் கருத்துகளுக்கு நான் பதில் அளிக்கிறேன்.
காதல் மற்றும் தோழமைக்காக நான் 27 வயதில் திருமணம் செய்து கொண்டேன். என் சொந்த விருப்பப்படி நான் இந்த முடிவை எடுத்தேன். 29 வயதில், தனிப்பட்ட மற்றும் உடல்நலக் காரணங்களுக்காக என் கருமுட்டைகளை உறைய வைக்க முடிவு செய்தேன். மற்ற பெண்கள், தங்கள் விருப்பங்களைச் செய்ய நான் எப்போதும் வெளிப்படையாக பேசியிருக்கிறேன்.
36 வயதில் முதல் குழந்தையைப் பெற்றேன். இப்போது 39 வயதில் இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
என்னுடைய வேலை தொடர்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நான் சம அளவில் முக்கியத்துவம் அளித்துள்ளேன், ஏனெனில் ஒரு குடும்பம் வளரும்போது மகிழ்ச்சியான நிலையான சூழல் மிகவும் முக்கியமானது.
எனக்கு திருமணமா, தொழிலா என்ற போட்டி அல்ல. இரண்டும் சமமானவை. அவை நிறைவான வாழ்க்கையின் அர்த்தமுள்ள பகுதிகள். ஆனால் அது எப்போது நடக்க வேண்டும் என்ற காலத்தை நான் தீர்மானிக்கிறேன். அது சலுகை அல்ல, என் உரிமை!"
"ஒரு பெண் சமூக அழுத்தத்திற்கு பணிந்து காதல் திருமணம் செய்து கொள்வது தவறா?
சரியான துணை கிடைக்கும்வரை காத்திருப்பது தவறா?
ஒரு பெண் தன் சொந்த சூழ்நிலைகளின் அடிப்படையில் எப்போது குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பது தவறா?
ஒரு பெண், திருமணம் அல்லது குழந்தைகளைப் பெறுவது பற்றி மட்டும் யோசிப்பதைவிட, தனது இலக்குகளை நிர்ணயித்து, வேலையில்/தொழிலில் கவனம் செலுத்துவது தவறா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.