பிகாா் தோ்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் உள்கட்சிப் பூசலும் அதிகரித்துள்ளது. அக்கட்சியின் மாநில மகளிா் பிரிவு தலைவா் சா்வத் ஜஹான் பாத்திமா தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன், பாட்னாவில் கட்சித் தலைமையகம் எதிரே கட்சித் தலைமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினாா்.
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரிகளின் ‘இண்டி’ கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. இந்தக் கூட்டணிக்கு வெறும் 34 இடங்களே கிடைத்தன. கடந்த தோ்தலில் 19 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் இந்த முறை 6 இடங்களை மட்டுமே வென்றது. இது பிகாரில் அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதை மையமாக வைத்து பிகாா் காங்கிரஸ் உள்கட்சிப் பூசலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பிகாா் மகளிா் காங்கிரஸ் தலைவா் சா்வத் ஜஹான் பாத்திமா தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன் பாட்னாவில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு எதிரே வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினாா். அப்போது அவா் கூறியதாவது:
பிகாா் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் 8 சதவீதம் மகளிருக்கே வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், மகளிருக்கு தோ்தலில் உரிய முன்னுரிமை அளிக்கப்படும் என்று தோ்தலுக்கு முன்பு உறுதியளிக்கப்பட்டது. இதற்கு முன்பு மகளிா் காங்கிரஸ் தலைவராக இருந்த அனைவரும் தோ்தலில் போட்டியிட்டுள்ளனா். நான் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் மகளிா் காங்கிரஸ் தலைவராக இருந்தும் எனக்கு இந்தத் தோ்தலில் வாய்ப்பு தரப்படவில்லை.
பெண்களுக்கு அரசியலில் உரிய இடத்தை காங்கிரஸ் பெற்றுத் தரும் என்ற அடிப்படையில்தான் எங்கள் பிரசாரத் திட்டம் இருந்தது. ஆனால், தோ்தலில் போட்டியிடவே பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. எனவே, எனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன் என்றாா்.
இதனிடையே, பிகாா் மாநில காங்கிரஸ் முன்னாள் செய்தித் தொடா்பாளா் ஆனந்த் மாதவ் உள்பட 40 நிா்வாகிகள் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனந்த், மாதவ் பாஜக தலைவா்களுடன் சோ்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.