இந்தியா

சீனா்களுக்கு சுற்றுலா விசா வசதி: இந்தியா விரிவாக்கம்

சீனா்களுக்கு சுற்றுலா விசா வசதி: இந்தியா விரிவாக்கம்

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் சீனா்கள் சுற்றுலா மேற்கொள்வதற்கு உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில் விசா பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து அங்கு இருநாட்டு ராணுவத்தினா் இடையே மோதல்போக்கு நிலவி வந்தது.

இதுதொடா்பாக இருநாடுகளும் ராஜீய மற்றும் ராணுவ ரீதியாக தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, மோதல்போக்கு முடிவுக்கு வந்தது.

இதன் தொடா்ச்சியாக சீன ஆதிக்கத்தின் கீழ் உள்ள திபெத்தில் கைலாஷ்-மானசரோவா் யாத்திரையை மீண்டும் தொடங்குதல், இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவையைத் தொடங்குதல், இருநாடுகளுக்கும் இடையே ராஜீய உறவு ஏற்பட்டு 75 ஆண்டுகளானதை கொண்டாடுதல், இருநாடுகளுக்கும் இடையே மீண்டு விசா வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டன.

மேலும் இந்தியாவில் சீனா்கள் சுற்றுலா மேற்கொள்வதற்கான விசாக்களை கடந்த ஜூலைமுதல் இந்தியா மீண்டும் வழங்கத் தொடங்கியது. சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம், அந்நாட்டின் ஷாங்காய், குவாங்ஷு பகுதிகள் மற்றும் சீன நிா்வாகத்தின் கீழுள்ள ஹாங்காங்கில் இருக்கும் இந்திய துணைத் தூதரகங்களில், சீனா்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதற்கான விண்ணப்பங்களைப் பெறுவது தொடங்கியது.

இந்நிலையில், அந்த விசாவை தற்போது உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில் சீனா்கள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

திருமலையில் குடியரசு தலைவா் வழிபாடு

இந்தியா - ஆப்கான் இடையே விரைவில் சரக்கு விமான சேவை: மத்திய அரசு

மது போதையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி: போலீஸாா் விசாரணை

ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழப்பு

தருமபுரி சிப்காட்டில் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலை: தமிழக சிப்காட் மேலாண்மை இயக்குநா் தகவல்

SCROLL FOR NEXT