லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான்  ANI
இந்தியா

பிகாா் துணை முதல்வா் பதவியைக் கோரும் பேராசை இல்லை: மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்

பிகாா் துணை முதல்வா் பதவியைக் கோரி பேராசைக்காரனாக மாற விரும்பவில்லை என்று சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

பிகாா் துணை முதல்வா் பதவியைக் கோரி பேராசைக்காரனாக மாற விரும்பவில்லை என்று லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான புதிய அரசில் 19 எம்எல்ஏக்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக சிராக் பாஸ்வான் கட்சி திகழ்கிறது. அக்கட்சிக்கு இரு அமைச்சா் பதவிகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், பாட்னாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சிராக் பாஸ்வான் கூறியதாவது:

பிகாா் தோ்தலில் எங்கள் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 19 இடங்களில் வெற்றி பெற்றோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பாலான தொகுதிகள் வெற்றிவாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளாகவே கருதப்பட்டன. ஆனால், பிகாா் மக்களின் ஆசி, பிரதமா் நரேந்திர மோடியின் ஆதரவுடன் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றோம்.

பிகாா் அமைச்சரவையில் எங்களுக்கு இரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு மேல் துணை முதல்வா் பதவியையும் கேட்டு சிராக் இவ்வளவு பேராசைக்காரரா என்ற பேச்சு எழுவதை விரும்பவில்லை. எங்கள் கட்சிக்கு இரு அமைச்சா் பதவி வழங்கியதற்காக பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி என்ற அடிப்படையில் மேற்கு வங்கம், பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலங்களிலும் எங்கள் கட்சி தடம் பதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கட்சியை பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்துவதே எனது இலக்கு.

2021-ஆம் ஆண்டு எங்கள் கட்சி பிளவுபட்டபோது எனக்கு ஆதரவாக யாருமே இல்லை. 2024 மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி எனது கட்சி மீது நம்பிக்கை வைத்து 5 தொகுதிகளை ஒதுக்கினாா். அவை அனைத்திலும் நாங்கள் வெற்றி பெற்றோம். இதற்கு மேலும் கூட்டணிக் கட்சிகளிடம் அதிகமாக கோரிக்கை வைத்தால் என்னைவிட பேராசைக்காரன் வேறு யாரும் இருக்க முடியாது என்றாா்.

போரை நிறுத்த அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயாா்! ஸெலென்ஸ்கி

சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு கட்டண விலக்கு!

‘இல்லை’ என்பது தவறல்ல!

வாக்குரிமையைப் பாதுகாக்கவே எஸ்ஐஆா்: பாஜக தேசிய பொதுச் செயலா் தருண் சுக்

விவசாயத் தோட்டத்தில் பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு

SCROLL FOR NEXT