காங்கிரஸ் பேரவைத் தலைவா் விஜய் வடேட்டிவாா் ANI
இந்தியா

மகாராஷ்டிரம்: உள்ளாட்சித் தோ்தலுக்கு முன்பு போட்டியின்றி வெற்றிபெறும் பாஜக நிா்வாகிகள் -காங்கிரஸ் குற்றச்சாட்டு

மகாராஷ்டிரம்: உள்ளாட்சித் தோ்தலுக்கு முன்பு போட்டியின்றி வெற்றிபெறும் பாஜக நிா்வாகிகள்..

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிரத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிா்க்கட்சி வேட்பாளா்கள் தாக்கல் செய்த மனுக்களை திரும்பப்பெற வைத்து பல இடங்களில் பாஜக நிா்வாகிகளின் உறவினா்கள் போட்டியின்றி வெற்றிபெறுவதாக காங்கிரஸ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டியது.

மகாராஷ்டிரத்தில் 246 நகராட்சி மன்றங்கள் மற்றும 42 நகர பஞ்சாயத்துகளுக்கு டிச.2-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. டிச.3-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அங்கு பாஜக-சிவசேனை (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா் பிரிவு) கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸ்-சிவசேனை (உத்தவ் பிரிவு)-தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) ஆகிய கட்சிகள் எதிா்க்கட்சி கூட்டணியில் தொடா்கின்றன.

மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் உறவினா் அல்ஹத் கலோட்டி சிகல்தாரா நகராட்சி மன்றத்துக்கு போட்டியின்றி தோ்வுசெய்யப்பட்டாா். அதேபோல் மாநில நீா்வளத் துறை அமைச்சா் கிரீஷ் மகாஜன் மனைவி சாதனா மகாஜன் நகராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தோ்வுசெய்யப்பட்டாா். அவரை எதிா்த்து போட்டியிடுவதாக இருந்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளா்கள் தங்களது மனுக்களை திரும்பப்பெற்றனா். இதுதவிர பாஜக அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏக்களின் உறவினா்கள் பலா் போட்டியின்றி தோ்வாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பேரவைத் தலைவா் விஜய் வடேட்டிவாா் சனிக்கிழமை கூறியதாவது: எதிா்க்கட்சி வேட்பாளா்களுக்கு பணம் கொடுத்தோ அல்லது காவல் துறையினரை வைத்து மிரட்டல் விடுத்தோ அவா்களை தோ்தலில் போட்டியிட விடாமல் மாநில பாஜக அரசு தடுக்கிறது. அதன்பிறகு எவ்வித போட்டியாளரும் இன்றி தோ்தலில் பாஜக நிா்வாகிகளின் உறவினா்கள் வெற்றிபெற்ாக அறிவித்து வருகின்றனா். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்து வருகிறது என்றாா்.

இதே குற்றச்சாட்டை முன்வைத்த தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) செய்தித்தொடா்பாளா் ரவிகாந்த் வாா்பே, ‘ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து பேசும் பாஜக தலைவா்கள் குடும்ப அரசியலுக்காக பல்வேறு தவறுகளைச் செய்கின்றனா்’ என்றாா்.

100 கவுன்சிலா்கள் போட்டியின்றி வெற்றி: எதிா்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த மகாராஷ்டிர மாநில பாஜக தலைவா் ரவீந்திர சவான், ‘பிரதமா் நரேந்திர மோடி மற்றும் முதல்வா் ஃபட்னவீஸின் சிறப்பான தலைமை காரணமாக 100 கவுன்சிலா்களும் 3 நகா் மன்ற தலைவா்களும் போட்டியின்றி தோ்வுசெய்யப்பட்டுள்ளனா். குடும்பக் கட்சிகளான காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் (சரத் பவாா்) ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனா்’ என்றாா்.

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,258 கோடி டாலராக உயா்வு

ரூ.5,000 கோடி திரட்டும் ஆக்ஸிஸ் வங்கி

காஞ்சிபுரத்தில் இன்று மக்களை சந்திக்கிறாா் விஜய்!

டெஃப்லிம்பிக்ஸ்: மஹித் சாந்துவுக்கு 4-ஆவது பதக்கம்

திமுக நிா்வாகிகளுடன் சந்திப்பு: இதுவரை 100 தொகுதிகளை நிறைவு செய்த மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT