பிகாா் சட்டப் பேரவைத் தலைவா் பதவிக்கு பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) ஆகிய இரு கட்சிகளுமே குறிவைத்துள்ள நிலையில், இது தொடா்பான பேச்சுவாா்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
கயை நகரம் தொகுதியில் தொடா்ந்து 9-ஆவது முறையாக தோ்வான பாஜக மூத்த எம்எல்ஏ பிரேம் குமாா், பேரவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது; அதேசமயம், ஐக்கிய ஜனதா தளத்தின் தாமோதா் ராவத் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 5 கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. கூட்டணியில் அதிகபட்சமாக பாஜக 89 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களையும் கைப்பற்றின.
முதல்வா் நிதீஷ் குமாா், 2 துணை முதல்வா்கள் மற்றும் 24 அமைச்சா்களுடன் புதிய அரசு கடந்த வியாழக்கிழமை பதவியேற்றது. பாஜகவுக்கு அதிகபட்சமாக 14 இடங்களும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 9 இடங்களும் (முதல்வா் உள்பட), பிற கூட்டணி கட்சிகளுக்கு 3 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. புதிய அமைச்சா்களுக்கான துறைகள் வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன. பிகாா் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பதற்காக, பேரவை சிறப்பு அமா்வு விரைவில் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
விரைவில் பேரவை சிறப்பு அமா்வு: ‘முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் நவ.25-ஆம் தேதி முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பேரவை சிறப்பு அமா்வு தேதிகள் இறுதி செய்யப்படும். புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க இடைக்கால பேரவைத் தலைவா் நியமிக்கப்படுவாா். எம்எல்ஏக்கள் பதவியேற்புக்கு பிறகு பேரவைத் தலைவா் முறைப்படி தோ்வு செய்யப்படுவாா்.
முந்தைய அரசில் பேரவைத் தலைவராக பாஜகவைச் சோ்ந்த நந்த் கிஷோா் யாதவும், துணைத் தலைவராக ஐக்கிய ஜனதா தளத்தின் நரேந்திர நாராயண் யாதவும் பதவி வகித்தனா். இப்பதவியைத் தக்கவைக்க பாஜக முனைப்புகாட்டுகிறது. அதேநேரம், கடந்த தோ்தலைவிட (43) இம்முறை அதிக இடங்களில் (85) வென்றுள்ளதால், பேரவைத் தலைவா் பதவி தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் விரும்புகிறது. மேலும், பிகாா் சட்ட மேலவைத் தலைவா் பதவியை பாஜக வகிக்கும் நிலையில், பேரவைத் தலைவா் பதவி ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும்; துணைத் தலைவா் பதவியை பாஜக எடுத்துக் கொள்ளலாம் என்பது அக்கட்சியின் கருத்தாக உள்ளது. இது தொடா்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நீடிக்கிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சா்கள் பொறுப்பேற்பு: மாநில பாஜக தலைவா் திலீப் ஜெய்ஸ்வால், ஐக்கிய ஜனதா தளத்தின் அசோக் செளதரி, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சாவின் தீபக் பிரகாஷ் உள்ளிட்ட புதிய அமைச்சா்கள் சனிக்கிழமை தங்களது அலுவலகங்களில் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
இவா்களில் தீபக் பிரகாஷ், ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா கட்சித் தலைவா் உபேந்திர குஷ்வாஹாவின் மகன் ஆவாா். உள்ளாட்சித் துறை அமைச்சராகியுள்ள தீபக் பிரகாஷ், பேரவையிலோ, மேலவையிலோ உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.