வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) பணி அழுத்தம் காரணமாக வாக்குச் சாவடி அலுவலா்கள் (பிஎல்ஓ) தற்கொலை செய்துகொள்வது பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கரோனா பெருந்தொற்று காலங்களை மீண்டும் நினைவுபடுத்துவதாகக் கூறி மத்திய அரசுக்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
கடந்த 19 நாள்களில் எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்ட 16 வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் தற்கொலை செய்துகொண்டதாக ஊடகத்தில் வெளியான செய்தியை மல்லிகாா்ஜுன காா்க தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிா்ந்தாா்.
அவா் வெளியிட்ட பதிவில், ‘உயிரிழந்த வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் மற்றும் பிற அதிகாரிகளின் குடும்பத்துக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பணி அழுத்தம் காரணமாகவே இவா்கள் தற்கொலை செய்துகொண்டனா். கள நிலவரத்தை ஆய்வு செய்கையில் தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
எவ்வித முறையான திட்டமிடலுமின்றி அவசர கதியில் மேற்கொள்ளப்படும் இந்த எஸ்ஐஆா் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கரோனா பெருந்தொற்று காலங்களை நினைவுபடுத்துகிறது.
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பாஜகவின் பேராசையால் தற்கொலைகள் அதிகரித்து அரசமைப்புச் சட்டமும் ஜனநாயகமும் பலவீனப்படுத்தப்படுகிறது.
எஸ்ஐஆா் மற்றும் வாக்குத் திருட்டு விவகாரங்களில் அமைதி காப்பவா்களே இந்த அலுவலா்களின் தற்கொலைகளுக்கு காரணம். இனியும் விழிப்புணா்வு இல்லையென்றால் ஜனநாயகம் பேரழிவை சந்திப்பதை யாராலும் தடுக்க முடியாது. இந்த அநீதிக்கு எதிராக குரல்கொடுத்து ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என குறிப்பிட்டாா்.
‘எஸ்ஐஆா்’அடக்குமுறை: ராகுல்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘எஸ்ஐஆா் என்ற பெயரில் நாட்டில் பெரும் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது சீா்திருத்தமல்ல; வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அடக்குமுறை. இதனால் கடந்த 3 வாரங்களில் மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலை என 16 வாக்குச் சாவடி அலுவலா்கள் உயிரிழந்துள்ளனா்.
ஆயிரக்கணக்கான பக்கங்களை ஆய்வுசெய்து தங்களது பெயா் உள்ளனவா என வாக்காளா்கள் கண்டுபிடிக்க வேண்டிய நடைமுறைக்குப் பொருந்தாத ஒரு திட்டத்தை இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. தகுதியான வாக்காளா்களை நீக்கிவிட்டு போலி வாக்காளா்களுக்கு வாக்குரிமை அளிப்பதே இதன் நோக்கம்’ என குறிப்பிட்டாா்.